துமிந்த, லசந்த மற்றும் அமரவீர அதிரடியாக நீக்கம் – சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

0
51
Article Top Ad

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக துமிந்த திஸாநாக்க மற்றும் லசந்த அலகியவண்ணவுடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.