கச்சத்தீவு விவகாரம் – அவதானம் செலுத்தியுள்ள இலங்கை அரசாங்கம்

0
9
Article Top Ad

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் திகதி நடைபெறும்.

ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விடயத்தை அவதானிக்குமாறு அறிவுறுத்தியுள்ள அரசாங்கம்

இந்த நிலையில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் இங்கு தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. பிரதமர் மோடியும் பலமுறை பிரசாரங்களுக்காக தமிழ்நாட்டுக்கு வருகைதந்துவிட்டார்.

தேர்தல் மேடைகளில் அவர் தற்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் அதிகமாக பேசி வருகிறார். இது தேர்தல் ஆதாயத்துக்காக பேசப்படும் விடயங்களாக உள்ளதாக குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு தாரைவார்த்தாக பாரதிய ஜனதாக் கட்சி கூறிவருகிறது. தொடர்ந்து தேர்தல் மேடைகளில் இந்த விவகாரம் பேசப்படுவதுடன், கச்சத்தீவை மீட்க பாரதிய ஜனதாக் கட்சி பாடுபடும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாரதிய ஜனதாக் கட்சியின் இந்த அறிவிப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதுடன், இந்தியாவில் உள்ள தமது தூதரகங்கள் ஊடாக இந்த விடயத்தை அவதானிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

தேர்தல் இலாபத்துக்காக கையில் எடுத்த பாஜக

1974ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது முதல் இருநாட்டு மீனவர்களுக்கு இடையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இருநாட்டு கடல் எல்லை பகுதிகளில் மீனவர்கள் கைதுசெய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அத்துடன், பலமுறை மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். இதனால் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டின் தேர்தல்களத்தில்தான் இந்த விடயம் சூடுபிடிக்கும்.

குறிப்பாக திமுக தமது சுயநலனுக்கான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்க ஒத்துழைப்புகளை வழங்கியதாக அதிமுக, நாம் தமிழர் உட்பட பல கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.

இந்த பின்புலத்தில்தான் தற்போது ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால், இது தேர்தல் இலாபத்துக்காக கையில் எடுக்கப்பட்டுள்ள விவகாரமாக பாஜக மீது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வருகின்றன.