பொது வேட்பாளர் சாத்தியம் இல்லை என்ற முடிவை தமிழர்கள் எடுப்பார்கள்

0
59
Article Top Ad

“தமிழ்க் கட்சிகள், அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்.”

– இவ்வாறு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பாக இன்று வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஒக்டோபர் மாதம் முதலாம், இரண்டாம் கிழமைகளில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதன் காரணமாக இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்னைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றியடைவார் என்றால் பரவாயில்லை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரே வெற்றி பெறுவார்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஆதரிக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடைய வைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம்.

மேலும் தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் என்ற விடயம் எந்த விதத்தில் சாத்தியம்? இதன் ஊடாக என்ன நன்மை கிடைக்கும்? என்று எமக்குத் தெரியவில்லை.

கடந்த காலங்களில் ஏதோவொரு பிரதான வேட்பாளர் ஒருவரையே தமிழர்கள் ஆதரித்துள்ளனர். அதுவே இம்முறையும் சரியானதாக அமையும் என நான் எண்ணுகின்றேன்.

தமிழர்கள் ஒருமித்த கருத்துடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளரைப் போடுவதன் மூலம் வெற்றியை நோக்கிச் செல்வதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அது சாத்தியமில்லை.

எனவே, தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சி ஏன் ஏற்பட்டுள்ளது என்பது புரியவில்லை. மேலும், தமிழ்க் கட்சிகள், அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்.” – என்றார்.