போர் பதற்றத்துக்கு மத்தியில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

0
69
Article Top Ad

இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் இராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஈரான் இராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியிருந்தது.

இதனால் இஸ்ரேலை தாக்குதலில் இருந்து காக்க அமெரிக்கா தனது போர் கப்பல்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது. இந்நிலையில், இஸ்ரேல் சரக்கு கப்பல் ஒன்றையும், ஈரான் இராணுவம் கைப்பற்றியது. இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

இந்த நிலையிலேயே இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது.

5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களில் 80ஐ அமெரிக்கா வீழ்த்தியது. ஈரான், ஏமனில் இருந்து ஏவப்பட்ட 6 ஏவுகணைகளை வீழ்த்தியது. இந்த தாக்குதல் 3ஆம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

“மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது. அமைதியை நிலைநாட்டும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள பின்புலத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானினால் இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் ஈரானிய நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திட்டமாக கட்டப்பட்டது.

இதன் மூலம், 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உற்றுநோக்கியுள்ளன. இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவுள்ள அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதியின் விஜயம் குறித்து திருப்தியில்லையென இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.