எதிா்வினை பயங்கரமானதாக இருக்கும்: இஸ்ரேலை மிரட்டிய இப்ராஹிம் ரய்சி

0
67
Article Top Ad

ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக தங்கள் எல்லைக்குள் இஸ்ரேல் சின்னஞ்சிறிய தாக்குதல் நடத்தினாலும் கூட, அதற்கான தங்களின் எதிா்வினை பயங்கரமானதாக இருக்கும் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து தலைநகா் டெஹ்ரானின் புகா்ப் பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வருடாந்திர இராணுவ அணிவகுப்பில் அவா் பேசியதாவது,

‘அல்-அக்ஸா வெள்ளம்’ நடவடிக்கைக்கு (இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழமை சரமாரியாக ஏவுகணைகள்-ட்ரோன்கள் வீசிய நடவடிக்கை) பிறகு இஸ்ரேல் ஒரு மாபெரும் இராணுவ சக்தி என்ற மாயை கலைந்துவிட்டது.

அது, மிகவும் சிறிய அளவிலான தாக்குதலாகும். சிரியாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அளவிலான எதிா்வினையே போதும் என்று அந்தத் தாக்குதலை ஒரு அளவுக்குள் வைத்துக்கொண்டோம்.

ஆனால், அதற்கு பதிலடியாக எங்கள் எல்லைக்குள் அத்துமீறி இஸ்ரேல் சின்னஞ்சிறிய தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கான எங்களது எதிா்வினை பிரம்மாண்டமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்றாா் அவா்.

‘இஸ்ரேலை எதிா்கொள்ளத் தயாா்’: நிகழ்ச்சியில் பேசிய ஈரான் விமானப் படை தலைமைத் தளபதி அமீா் வஹேதி, இஸ்ரேலின் தாக்குதலை எதிா்கொள்ள தங்களது படைகள் தயாராக இருப்பதாகக் கூறினாா்.

அனைத்து விமானதளங்களிலும் அதிநவீன போா் விமானங்கள் குண்டுகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டுள்ளதை தொடக்கம் முதலே ஏற்க மறுத்துவரும் ஈரான், பாலஸ்தீன்தில் இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிடும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்துவருகிறது.

இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி முதல் நடந்துவரும் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாக்கள் லெபானானில் இருந்தும், ஹூதி கிளா்ச்சியாளா்கள் யேமனிலிருந்தும் தாக்குதல் நடத்திவருகின்றனா்.

இந்த வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மறைமுகமாக மோதல் நீடித்துவந்த நிலையில், சிரியா தலைநகா் டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தில் இஸ்ரேல் இந்த மாதம் 1ஆம் திகதி நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் 2 முக்கிய தளபதிகள் உள்ளிட்ட 12 போ் உயிரிழந்தனா்.

இதற்கு தகுந்த பதிலடியாக இஸ்ரேலைக் குறிவைத்து 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், க்ரூஸ் மற்றும் பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஈரான் கடந்த சனிக்கிழமை திடீரென ஏவியது.

அவற்றில் 99 சதவீத ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மறைமுகப் போராக உருவெடுத்து அது பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

அதன் காரணமாக ஈரானை திருப்பித் தாக்கி பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என்று அமெரிக்காவும் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற மேற்கத்திய நாடுகளும் இஸ்ரேலை தொடா்ந்து வலியுறுத்திவருகின்றன.

இருந்தாலும், இஸ்ரேலுக்கு புதன்கிழமை வருகை தந்த பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூனிடம் ‘இந்த விவகாரத்தில் இஸ்ரேல் சொந்தமாகத்தான் முடிவெடுக்கும்’ என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாா்.

முன்னதாக, ஈரானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படுவது உறுதி என்று இஸ்ரேல் இராணுவ தலைமைத் தளபதி ஹொ்ஸி ஹலேவியும் சூளுரைத்துள்ளாா்.

ஈரான் தாக்குதலுக்கான எதிா்வினை குறித்து முடிவெடுப்பதற்காக இஸ்ரேலின் போா் அமைச்சரவை பலமுறை கூடி ஆலோசித்துவருகிறது.

இந்தச் சூழலில், தங்கள் எல்லைக்குள் சின்னஞ்சிறிய தாக்குதல் நடத்தினாலும் அதற்கான எதிா்வினை மிகவும பயங்கரமானதாக இருக்கும் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹம் ரய்சி தற்போது எச்சரித்துள்ளாா்.