ஏழு விசேட வைத்தியர்கள் கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற்றம் : காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும் சத்திரசிகிச்சைகள்

0
55
Article Top Ad

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை வாரத்தில் மாத்திரம் விசேட வைத்தியர்கள் ஏழு பேர் நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தினுள் அம்பாந்தோட்டை,பிபில,மெதிரிகிரிய மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் விசேட மயக்க மருந்து நிபுணர்கள், நுவரெலியா மற்றும் மஹியங்களை வைத்தியசாலைகளின் மகப்பேறியல் விசேட வைத்தியர்கள் மற்றும் மொனராகலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் உடல் நோய்கள் விசேட வைத்தியர் உள்ளிட்ட ஏழு பேர் இவ்வாறு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தற்போது 350 விட அதிகளாவிலான விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதால் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நடாத்துவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சத்திரசிகிச்சைகளை காலவரையறையின்றி ஒத்திவைக்க வேண்டியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்களுடன் மேற்கொள்ளப்படும் பத்திர ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகையை ஒழுங்கான முறையில் சுகாதார அமைச்சு பெற்றுக்கொள்ள தவறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேட வைத்தியர்கள் இவ்வாறு தப்பியோடும் நிலையில், அவர்களுக்கான விசேட பயிற்சியை வழங்க செலவிடப்பட்ட பொதுமக்களின் பணத்தை செலுத்திவிட்டு செல்வார்களேயானால் மற்றுமொரு அதிகாரியை அந்த பணத்தின் மூலம் பயிற்றுவிக்க முடியும் என்பது அதிகாரிகளின் கருத்தாக காணப்படுகிறது.

குறித்த பணத்தை செலுத்தாது யாரும் அறியாத வகையில் திருட்டுத்தனமாக நாட்டை விட்டு தப்பியோடுவது பொது மக்களின் பணத்தை தவறான முறையில் பயன்படுத்துவது என சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.