“முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கு அளிக்க வேண்டும்“: புதிய யுக்தியை எடுத்துரைக்கும் சி.வி. விக்னேஸ்வரன்

0
41
Article Top Ad

முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கும், 2ஆம் 3ஆம் வாக்கு விரும்பிய வேட்பாளருக்கும் வழங்குவது யுக்தி என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சி.வி. விக்னேஸ்வரன்

போராட்ட மன நிலையை கைவிட்டால் நாங்கள் இழந்த உரிமைகளை பெற முடியாது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

போராட்டம் என்பது ஆயுத ரீதியானது அல்ல. தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதன் மூலம் சர்வதேசத்துக்கு செய்தியை வெளிப்படுத்துவதாகும். பொது வேட்பாளர் வெல்லப் போவதில்லை.

அப்படியான போராட்டம் ஒன்றின் ஊடாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் ஓர் செய்தியை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

வன்முறை மூலமோ, உணவு தவிர்ப்பு மூலமோ அல்ல. வேறு வடிவில் அ போராட்டம் அமைய வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும்.

மும்மொழியிலும் பேசக் கூடிய வேட்பாளர் ஒருவரை நாம் முன்நிறுத்த வேண்டும். அவர் எமது பிரச்சினைகளை மூன்று மொழியிலும் எடுத்து கூறுவார். ஐக்கிய நாடுகள் சபை நடாத்தும் தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக்கொணர முடியும்.

தமக்கு விரும்பிய சிங்கள கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாத நிலை உருவாகும் என பலரும் தயங்குகின்றனர். முதல் வாக்கினை பொது வேட்பாளருக்கும், 2ஆம், 3ஆம் வாக்குகளை தாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கும் வழங்க முடியும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கலவரம் வெடிக்கும் என கருதுகின்றனர். அவ்வாறு கலவரம் ஒன்று உருவாகினால் இந்த சூழலில் எவ்வாறான நிலை ஏற்படும் என சிங்கள தலைமைகள் நன்கு விளங்கியுள்ளனர். புதிய யுக்திகளை பயன்படுத்தி எமது உரிமைகளை பெற வேண்டும்.