ரஃபா மீது தீவிர தாக்குதலை தொடரும் இஸ்ரேல்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

0
61
Article Top Ad

”காசாவின் ரஃபா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளமை பொதுமக்களுக்கு ஆபத்தானது” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சமூகம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ரஃபா மீதான இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் தாக்குதல் கண்டித்துள்ள நிலையிலும் தொடர்ந்து தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதாக மத்திய கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.

”இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தப் போகிறது என்று நான் பயப்படுகிறேன்,” என்றும் ஜோசப் பொரெல் கவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், மக்களை உரிய பாதுகாப்புடன் அகற்றாது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அமெரிக்கா ஏற்காது என வெள்ளை மாளிகை நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட போதிலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், காசாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அமைப்புடன் எகிப்து மற்றும் கத்தார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதாக எகிப்து மற்றும் கத்தார் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ராஃபா நகரம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தின. அந்நகரின் சில பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

காசா போர் காரணமாக உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ராஃபாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், ராஃபா மீது இஸ்‌ரேல் நடத்தும் தாக்குதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தில் போர்நிறுத்த உடன்பாடுகளை எட்டவும் பேச்சுகள் நடத்தப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் தரப்பில் இதற்கு சாதகமான சமிஞ்சைகள் வெளியாகவில்லை.

ஹமாஸ் அமைப்பினர் ராஃபாவில் பதுங்கியுள்ளனர் என்றும் அவர்களை வேரோடு அழிப்பதே இஸ்‌ரேலின் இலக்கு என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.