ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை கூலிப்படையினர்

0
51
Article Top Ad

இலங்கையின் ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்கள் சிலர் ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவத்துடன் இணைவதற்கான மனித கடத்தலை, இந்நாட்டில் முப்படையில் சேவை புரிந்த உயர் பதவிகளை வகித்த குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் கூலிப்படையாக பணிபுரியும் இலங்கையர்கள் அங்கு அனுபவிக்கும் சிரமங்கள் தொடர்பில் அண்மைய தினங்களாக பல செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரஷ்ய இராணுவம் உக்ரைன் மீது போர்தொடுத்த நிலையில் உயர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமை போன்ற சலுகைகள் வழங்கப்படும் என்று கூறி,பல்வேறு நாடுகளில் இருந்து கூலிப்படையினர் நியமிக்கப்பட்டனர்.

இலங்கை முப்படையினர்

இதன்போது, ஏராளமான ஓய்வுப் பெற்ற இலங்கை முப்படையினரும் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், ரஷ்ய – உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக அடையாளம் காணப்படவில்லை எனவும், இதுவரையில் போரில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, ரஷ்யா நோக்கி புறப்பட்ட இலங்கை வீரர்கள் சிங்கள ஊடகமொன்றுக்கு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

“நாம் ரஷ்ய இராணுவத்தில் இணையும் நோக்கில் இலங்கையிலிருந்து வந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதுவரையில் எங்களுக்கு எந்தவித சம்பளமும் வழங்கவில்லை. எங்களுக்கு கிடைத்த பணத்தையும் பலாத்காரமாக வாங்கிவிட்டனர்.

தற்போது எங்களிடம் பணம் இல்லை. வாழ்க்கை எப்போது முடியும் என தெரியவில்லை.

தற்போது எங்களுக்கு தெரிந்து சுமார் 500 பேர் உள்ளோம்.

சுமார் 100 பேர் உயிரிழந்து விட்டனர்.

சுமார் 200 பேருக்கு படுகாயம்.

நாங்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே மோசடியாளர்களிடம் ஏமாந்து இங்கு வந்தோம்.

உங்களால் முடியுமென்றால் எங்களை காப்பாற்றுங்கள்.

ஜனாதிபதி அவர்களே, கட்சி , எதிர்க்கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து எங்களை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எங்களுடைய குடும்பத்தினர் அப்பாவிகள்.” என தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து மற்றுமொரு வீரர்,

“நாம் கடந்த 29ஆம் திகதி இங்கு வந்தோம். இங்கு சுமார் 75 பேர் இருக்கின்றோம். நாங்கள் சுமார் 18 இலட்சத்தை செலுத்தி இங்கு வந்துள்ளோம். இங்கு உள்ளவர்களுடனான ஒப்பந்தம் காரணமாக எங்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது.

தற்போது நாங்கள் உக்ரைனில், சுமார் 8 பேர் இருக்கின்றோம். வெளியே வரமுடியாத அளவுக்கு பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளோம். இங்கிருந்து வெளியேறி மறுபக்கம் சென்றால் கண்ணிவெடிகள் உள்ளன.

உக்ரைன் எல்லையை எங்களால் தாண்ட முடியாது. அணிந்திருந்த ஆடையோடு மாத்திரமே இன்று வரை இருக்கிறோம். முகத்தை கூட கழுவ வழியேதும் இல்லை.” என கூறியுள்ளார்.