தமிழ்த் தேசியக் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நிலைநிறுத்தும் நோக்கில் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் எனும் நோக்கு நிலையில் தமிழர்களின் அடிப்படைக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி நிலைநிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் தார்மீக கடமையாகும்.
இதை அடைவதற்கான இலக்கு நோக்கியே கடந்த 70 ஆண்டுகளாக மிதவாத அரசியலிலும் ஆயுத போராட்டத்திலும் பல முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
யாவற்றிலும் பின்னடைவும், தோல்வியும், அவமானமும், இழப்பும், இன அழிவுமே எஞ்சியன. இதில் 2009 க்குப் பின்னர் நிலைமை மிகவும் வலுவிழந்து போனது, போய்க்கொண்டிருக்கிறது.
அதைத் தடுப்பதற்கான நிலையான வழிமுறைகள் எவையும் நெறிமுறை சார்ந்து கட்டமைக்கப்படவில்லை. அதற்குரிய ஆக்கபூர்வமான, புத்திபூர்வமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கு தூய தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் நின்று, நிலைக்கக்கூடிய வல்லாண்மையுள்ள தலைவரின்மையே அடிப்படைக்காரணம்.
15 ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அந்தக் காலத்தோடு தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகமும், தமிழ்த் தேசிய உணர்வும் கரைந்து கொண்டே போகின்றன.
இது பற்றி ஆழமான உணர்தல் இன்றி, அடுத்த தேர்தலில் எப்படி வெல்லலாம் என்றே தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்கிறார்கள். அதை நோக்கியே நகர்கின்றனர்.
பதவி சண்டையாலும், உள்கட்சி முரண்பாடுகளாலும், பல கட்சிகளாகவும் பல பிரிவுகளாகவும் உருக்குலைந்து விட்டனர்.
பெரிய அண்ணன் பாத்திரத்தில் எவரும் இன்மையால்தான் கட்டுப்பாடோ, கட்டமைப்போ, கூட்டு பொறுப்போ இன்றி எல்லோரும் தலைவர்களாகிவிட்டனர்.
அதுதான் இனத்தின் பெரிய சாபக்கேடு. தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கக்கூடிய நிலையில் எந்தத் தமிழ்க்கட்சியும் இல்லை.
கட்சிகளுக்கும், கூட்டுக்களுக்கும் கூட உருப்படியான தலைவர்களும் இல்லை. மிக மிகப் பலவீனமான நிலையில் தமிழர்கள் நட்டாற்றில் தவிப்பது போல்தான் இன்றைய கள நிலைவரம் காணப்படுகிறது.
ஏலவே அம்பாறை மாவட்டம் கைநழுவி போய்விடும் நிலையில் உள்ளது. இதே நிலையில்தான் தற்போது திருகோணமலையும் எட்டிப்பிடித்து உள்ளது.
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பிலும் உள்ளக ரீதியாக குடியேற்றம், கட்டமைக்கப்பட்ட நில அபகரிப்பு, அரச திணைக்களங்களின் நெருக்கடி என பல்வேறு விதமான பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதைப் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்பவர்களாகத் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் இல்லை. ஆகவே, இவ்வாறான கையறு நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமா?
ஆனால் இவ்விடயத்தில், இதன் அடிப்படைக் கொள்கைக் கோட்பாடுகளுடன் இப்பத்தியாளர் உட்பட தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் எவருக்கும் இரு கருத்து நிலை இருக்காது.
ஆனால் மிகப் பலவீனமான களச் சூழலில் இந்த கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வலிமை, வல்லமை அற்ற நிலையில் தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகள் உள்ளமையால் இதனை எப்படி மக்கள் மயப்படுத்துவது, அதற்கான நடைமுறைச் சாத்தியமான நிகழ்ச்சி நிரல் என்ன என்ற கேள்விகள் எழும்புகின்றன.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சகல தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகையை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல், அதே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல், 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தல், 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தல், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பின்னர் அதே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய ஏழு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.
யுத்தத்துக்குப் பிந்திய நிலைமை என்பதனால் சம்பந்தனின் தலைமைத்துவத்தை ஓரளவுக்கு சாமானிய மக்கள் நம்பினார்கள்.
ஆனால், 2015 ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஏற்பட்ட நல்லாட்சி அரசின் இணக்க அரசியலாலும், நிழல் அமைச்சர் பதவியாலும் தமிழ்த்தேசிய நீக்கம் ஏற்பட்டது.
புலி நீக்க அரசியலில் முனைப்புக் காட்டிய சம்பந்தன், தமிழ்த்தேசிய நீக்கத்தையும் ஏற்படுத்திவிட்டார். இவர்களின் இணக்க அரசியலால் எதுவும் தமிழர்களுக்கு நிகழவில்லை.
இப்பத்தியாளர் உட்பட பலர் தமிழரசு கட்சியில் இருந்து கொள்கை ரீதியாக முரண்பட்டு வெளியேறினார்கள்.
2015இல் நாம் என்ன கூறி வெளியேறினோமோ அது இன்று தீர்க்க தரிசனமாக நிறைவேறியுள்ளது. ஆனால் தமிழ்த் தலைமைகள் இன்னும் சிந்திக்கவே இல்லை.
எனவே தலைவர்கள் 2015க்கு பின்னர் இணக்க அரசியலில் ஈடுபட்டமையும், கிழக்கு மாகாணத்தில் கேவலம் அதிகாரம் அற்ற இரண்டு அமைச்சர் பதவிக்கு கூட்டாட்சி நடத்தியமையும், உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கொள்கையும் இன்றி பதவிக்காகப் பிசாசுடனும் கூட்டு சேருவோம் எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியமையும் கண்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர்.
இவர்கள் மீது வைத்திருந்த புலிகளின் நீட்சி என்ற எண்ணமும் எதிர்கால நம்பிக்கையும் குறையத் தொடங்கின.
தலைவர்கள் கம்பரலிய அபிவிருத்தி மாயைக்குள் அகப்பட்டுக் கொள்ள தொண்டர்களும், வாக்காளர்களும் பிற நலன் நோக்கி சிந்திப்பதில் தவறில்லைத்தானே…?
தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்னும் இணக்க வழிமுறையையும், அபிவிருத்தியும் வேலை வாய்ப்பும் என்று நலன் நாடல்களைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
இதுவே, தமிழ்த் தேசியத்தின் மீது வலிமையாக இருந்த மக்களை இணக்க அரசியல் நோக்கி நகர்த்தியது.
இவர்கள்தான் ஆட்சியாளர்களின் இதயத்தில் இருக்கிறோம் என்றவர்கள். நீங்கள் இதயத்தில் இருந்தால் நாங்கள் இமையாக இருந்து இணக்கத்தை தொடர்வோம் என மக்கள் தீர்மானித்து விட்டனர்.
அதனால்தான் கடந்த தேர்தலில் வாக்குச் சிதறல்கள் ஏற்பட்டு பின்னடைவு நேர்ந்தது. ஆகவே தமிழருக்கு பெரும் துரோகம் செய்தது தமிழ்த்தேசிய கூட்டமைப்பே.
தமிழ் மக்கள் அல்லர். மக்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. வரும் தேர்தல்களிலும் இந்த நிலைமை மோசமடையலாம்.
ஆகவே இவ்விதமான நிலையில் உள்ள கள யதார்த்தத்தை புரியாமல் பொது வேட்பாளர் என புறப்பட்டவர்களின் நிலைமை பரிதாபம்.
கடந்த ஒரு தசாப்ததிற்கு மேலாக, தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப் படுத்தவும், புதிய கூட்டு உருவாக்கவும் என இப்பத்தியாளர் ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்?’ எனும் தொடங்கிய கூட்டங்கள் பல்வேறு விதமான தலைப்புகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டன.
உள்ளகக் கலந்துரையாடல்கள், இரகசிய சந்திப்புக்கள் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக என்னோடு சேர்ந்து பயணித்தவர்கள் – என் அன்புக்குரியவர்கள் – அவர்களின்று விமர்சனத்திற்குள்ளகியுள்ளமை எனக்கும் வேதனையே.
எனவே பல்வேறு விதமான பட்டறிவு அனுபவங்களை பெற்றுக் கொண்டுள்ளோம். அந்த அனுபவத்தில் இருந்து இவர்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொண்டவர்களாகத் தெரியவில்லை.
தமிழ்த்தேசியம் பேசிய கட்சிகள் எல்லாம் கடந்த காலத்தில் எம்மை எப்படி ஏமாற்றின என்பது இவர்களுக்கு நன்கு புரிந்த பின்னும் இவர்களை நம்பி பொது வேட்பாளர் விடயதில் களத்தில் இறங்கியது மகா தவறு.
அதுவும் முரண்பட்டவர்களின் கூட்டின் ஆதரவுடன் முன்நகர்ந்தது அதைவிடத் தவறு. இவர்களில் சிலர் ஏனோ தானோ என்று கூட்டங்களுக்குச் சென்று வந்தனர்.
அதுவும் ஓர் ஊடக முதலாளி அழைத்ததால் ஊடகத்தைப் பகைக்க முடியாத கட்டத்தில் அந்த அச்சத்தினால் சென்றனர். இப்பொழுது அந்த உபயகாரர்களும் அமைதியாகிவிட்டனர் போல் தெரிகிறது.
சில தனி நபர்களே இதனை முன்னெடுக்கின்றனர். ஆகவே இவர்களால் அரசியல்வாதிகளுக்கு எந்த அச்சமும் இல்லை.
அதனால் இவர்களை இலகுவாக ஏமாற்றி விடுவார்கள். யாழில் நடைபெற்ற ஜனாதிபதி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உரையே இதற்குச் சான்று.
இவ்விடயத்தில் தமிழரசு கட்சி ஒருபோதும் இதற்கு (பொது வேட்பாளர் திட்டத்துக்கு) இணங்காது என்பது கடந்த 70 ஆண்டுகளாகக் கொழும்போடு அதன் மிதவாத அரசியலின் இணக்கப்பாட்டின் வெளிப்பாட்டை வைத்தே விடுதலை அரசியல் மீதான நலனை எவ்வாறு அது உற்றுநோக்கும் என்பதனை புரிந்து கொள்வதற்கு அதிக அறிவு அவசியம் இல்லை.
வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு நிகரான கோட்பாட்டுத் தீர்மானத்தை முன்வைத்து இப்போது பொது வேட்பாளரை நிறுத்தப் போகின்றனர் எனக் கூறுகின்ற தரப்பினர், 13க்கு ஆதரவாக இந்தியாவுக்குக் கடிதம் எழுதின கட்சிகளோடும், இதில் 13ஐ ஆதரித்த பத்தி எழுத்தாளர்களோடும், கூட்டாக இருப்பதும் இவர்களின் அடிப்படை நோக்கு நிலையில் எப்படி தடம் மாறாமல் பயணிக்க முடியும் எனும் கேள்வியை எழுப்பாமல் இல்லை.
ஆகவே இவர்களின் முயற்சியின் பிரகாரம் பொது வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெறாவிட்டால் இவர்கள் முன்வைத்த அடிப்படை கோட்பாட்டு சித்தாந்தத்தை மக்கள் நிராகரித்து விட்டனர் என அரசும் ஏனைய தரப்புகளும் மிக இலகுவாக கூறி தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் வழமை போன்று பொருளாதார மேம்பாடே தீர்வு எனக் கூறி விடுவார்கள்.
இதில் உள்ள ஆபத்தை இவர்கள் புரியாதமை வேடிக்கையே. போரிடுவதற்கு களமே முக்கியம். களம் சாதகமா என்பதை முதலில் உய்த்துணர வேண்டும்.
இந்தியா இந்த விடயத்தில் வழமை போன்று இரட்டை வேடம் போடுவதாகவே புரிகிறது.
இராஜதந்திரத் தரப்புகள் ஒருவிதமாகவும் புலனாய்வு தரப்புகள் மற்றொரு விதமாகவும் இரண்டு பட்ட நிலையிலே இதனை அணுகுகின்றன என அறிய முடிகிறது. இது இந்தியாவின் வழமையான – வாடிக்கையான- செயற்பாடு ஆகும்.
இந்த விடயத்தில் இறங்கி, தமிழ் மக்கள் தோல்வி கண்டால் அல்லது தமிழருக்குப் பின்னடைவு ஏற்பட்டால், டெல்லி உளமாற ரசிக்கக் கூடிய மனோ நிலையிலேயே உள்ளது.
ஏனெனில் கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மத்திய அரசு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழர்களுக்கு செய்யவில்லை.
எனவே கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இந்தத் தமிழ் கட்சிகளை தமிழ்த் தேசிய அடிப்படை நலனில் அக்கறையோடும் உண்மையோடும் நேர்மையோடும் விசுவாசமாக பயணிக்க வைக்கலாம் எனும் நோக்கோடு எடுத்த முயற்சிகள் அத்தனையும் தோற்றே போயின.
ஆகவே இனியும் இவர்களை நம்பியிராமல், இந்தப் பொது வேட்பாளர் விடயத்தில் முன் நிற்கின்ற சிவில் அமைப்புகள் ஒன்று திரண்டு ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, ஒரு சீர்திருத்தமான நோக்கில் தமிழர் அரசியலை கொண்டு செல்வதற்கு முனைய வேண்டும்.
இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடிய அண்ணாஹசாரே அணியில் இருந்த கெஜ்ரிவால், டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி பஞ்சாப் வரையும் வியாபித்து, நாட்டில் மூன்றாவது தேசியக் கட்சியாக வளர்ச்சி அடைந்தார்.
அதுவும் டெல்லியில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய குடும்பத்தை சேர்ந்தவரும் பல தடவைகள் முதல்வராக இருந்தவருமான ஷீலா டிக்ஸிற்றைத் தோற்கடித்து பத்தில் ஒன்பது வீதம் என்னும் அடிப்படையில் பெரு வெற்றி பெற்றார்.
இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அவரைப் பழி வாங்கி வருகிறது. அது வேறு விடயம்.
அன்று விளக்குமாறு சின்னத்தைக் கையில் எடுத்தவாறு டில்லியிலிருந்து ஊழல் அரசியலைத் துடைத்தகற்றுகிறேன் என்ற ஆவேசத்தோடு களமிறங்கி சாதித்தார் கெஜ்ரிவால்.
ஆனால் அவ்வாறான ஒரு களத்தைத் தயார்படுத்தி, நடைமுறைச் சாத்தியமான அரசியலை அறத்தின் வழியில் கொண்டு செல்வதற்கு வழி தேடுவதே உகந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர் கூறியமை போல் ‘பல தலைவர்களை நம்பினேன், பல தலைவர்களைத் தேடினேன், எல்லோரும் ஏமாற்றி விட்டனர், அதனால் நானே தலைவராகி விட்டேன்’ என்ற கூற்றை முன்னுதாரணமாக்கிக் களத்துக்குத் தயாராக வேண்டும்.
அது ஒன்றே இவர்கள் கூறும் மாற்று, அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தும். நோக்கு அரசியல் செயல்பாட்டுக்கு வித்திடும்.
யதார்த்த அரசியல் போன்றவற்றை செயற்படுத்தவும் நிலை நிறுத்தவும் அதுவே வாய்ப்பாக அமையும்.
இன்று ஆதாயச்சூதாடிகளாக கதிரைகளைச் சூடேற்றி, தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்த்தேசியம் எனும் கோட்பாட்டையும் அதன் நோக்கையும் அடைவதற்குரிய வழிகளை ஏற்படுத்தாமல் ஏமாற்று அரசியல் செய்யும் அசகாய சூரர்களுக்கு மிகப்பெரிய சாட்டையடி கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
பொது வேட்பாளர் விடயம் களத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. ஏனெனில் சிவில் சமூகமாக கள அரசியல் பணிகளைச் செய்யக்கூடிய அளவுக்கு தொண்டர்களோ பணமோ அதற்குரிய ஏனைய வசதிகளோதற்கு இல்லை.
அரசியல் கட்சிகள் ஆதரிக்கக் கூடிய நிலையில் இல்ல. அவர்கள் தங்களின் நாடாளுமன்றத் தேர்தல் அரசியலில் எப்படி வெற்றி பெறலாம் என்கின்ற வியூகத்தையே இப்பொழுது வகுத்து வருகின்றனர்.
ஆகவே இனியும் தாமதிக்காமல் – இவர்களை நம்பாமல் – களத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள். காலம் ஒருபோதும் இடைவெளியை விட்டதில்லை.
தலைவர்களைக் காலம் உருவாக்கிக் கொண்டே இருக்கும். ஆகவே புறப்படுங்கள் களம் நோக்கி – கெஜ்ரிவால் போல தும்புக்கட்டையையோ, விளக்குமாற்றையோ தூக்கிக் கொண்டு.
தமிழ்த் தேசிய சிந்தாந்தப் புலத்தை அடைத்து நிற்கும் புல்லுருவிகள் அகற்றித் துடைத்து, தமிழ் தேசியத் தளத்தை சுத்தப்படுத்தி, அதில் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் எனும் நோக்கு நிலைகளை உறுதியாக நிலைநிறுத்துவோம்.
வி.எஸ்.சிவகரன்