பிரித்தானியாவை விட்டு வெளியேறுகின்றாரா ரிஷி சுனக்?

0
59
Article Top Ad

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மறுத்துள்ளார்.

பிரித்தானியாவே தனது வீடு எனவும் தேர்தலுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு செல்லும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஆளும் ‘கன்சர்வேடிவ் கட்சியை’ சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதப்படுத்திய பிரதமர் ரிஷி சுனக், இன்னும் சில வாரங்களில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜாக் கோல்ட்ஸ்மித் சமீபத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது அந்நாட்டு அரசியலை பரபரப்பாகியுள்ளது. எவ்வாறாயினும், அமர்ஷாமில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பேசிய சுனக், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

“நான் எங்கும் போவதில்லை. இந்த நாடு என் வீடு. நான் சவுத்தாம்ப்டனில் பிறந்து வளர்ந்தவன். உள்ளூர் சமூகத்திற்கு சேவை செய்வதன் மதிப்புகளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நானும் அதையே செய்து வருகிறேன்.

எனது இரண்டு மகள்களும் இங்கு படிக்கின்றார்கள். எனது குடும்பத்தை இங்கிருந்து மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை.

முன்பு கூறியது போல், செயின்ட் மேரிஸ் மைதானத்தில் சவுத்தாம்ப்டன் கால்பந்து கழகப் போட்டிகளை பார்த்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியப் பொதுத் தேர்தல் ஜூலை 4ஆம் திகதி நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், அடுத்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட, எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளன.