இலங்கையில் இராமாயணச் சுவடுகள்

0
76
Article Top Ad

ந்தியாவில் ராமர் என்ற பெயரில் அநேகமான கோயில்கள் காணப்பட்டாலும், இலங்கையில் சீதா எலிய கோயிலைத் தவிர உலகில் வேறு எந்த இடத்திலும் சீதை என்ற பெயரில் கோயில்கள் இல்லை என அக் கோயிலின் அறங்காவலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சீதா அம்மன் ஆலயம் நுவரெலியாவிலிருந்து பதுளை வீதியில் 3.6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இராவணனால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீதையை சூரிய ஒளியை பார்ப்பதற்காக அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், சீதையை தேடி வந்த இந்த இடத்தில் தான் அனுமனால் சீதையை முதன்முதலாக பார்க்க முடிந்ததாகவும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அது தொடர்பான சில அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘ஸ்ரீராமாயணச் சுவடுகள்’ (Sri Ramayana Trails)

மேற்குறிப்பிட்ட புராணக்கதையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இலங்கையின் 9 வரலாற்று இடங்களை மேம்படுத்தும் திட்டமான ‘ஸ்ரீராமாயணச் சுவடுகள்’ (Sri Ramayana Trails) கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார தொடர்பை மேம்படுத்தி, நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், அதிநவீன தொழில்நுட்ப மற்றும் சுற்றுலா முறையை பின்பற்றும் ‘ஸ்ரீராமாயணச் சுவடுகள்’ திட்டம், அங்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவின் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் பிரதம பொருளாளர் கோவிந்த் தேவகிரி மகாராஜ் சுவாமிகள் மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்னாயக்க ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதன் மூலம் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.

இது 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு என்று கூறப்படுகிறது.

‘ஸ்ரீராமாயணச் சுவடுகள்’ திட்டத்தின் நோக்கம்?

ஸ்ரீ ராமாயண சுவடுகள் என்று அழைக்கப்படும் இந்த திட்டம், இலங்கையில் ராமர்-சீதையின் கதையுடன் தொடர்புடையதாக அங்கீகரிக்கப்பட்ட 9 இடங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும்.

அந்த 9 இடங்கள் பின்வருமாறு.

1. ஆதாமின் பாலம் மன்னார் படுகையில் இருப்பதாக கூறப்படுகிறது. (ஒற்றுமை மற்றும் வலிமையைக் குறிக்கும் ராமரின் படையால் கட்டப்பட்ட பழம்பெரும் பாலம்)

2. சீதா எலிய (சீதா தேவியை ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட இடம் என்று கூறப்படும் பசுமையான மற்றும் அமைதியான சூழலில்)

3. வெலிமடை, திவுரும்பொல (சீதா தேவியின் அக்னி சோதனை)

4. உஸ்ஸங்கொட தேசிய பூங்கா (இராமர் முதலில் இலங்கையில் இறங்கிய இடம்)

5. காலி – ரூமஸ்ஸல ( சன்ஜீவனி மூலிகை காணப்பட்டதாக கூறப்படுகின்றது)

6. திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் (சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பழமையான கோயிலின் கட்டிடக்கலை முக்கியத்துவம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்)

7. சிலாபம்- மாணவரி கோயில் (அருள் மற்றும் பக்தியின் சின்னமான ராமரால் நிறுவப்பட்ட கோயில்)

8. எல்ல – ராவணன் குகை (சீதையை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் இடம்)

9. கதிர்காமம் அல்லது தெற்கு கைலாசம்.

இதற்கிடையில், இந்த திட்டத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், ராமர்-சீதை புராணத்துடன் தொடர்புடைய வரலாற்றுக் கதையானது செயற்கை நுண்ணறிவு (AI), Augmented reality மற்றும் virtual Reality போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காட்சிப்படுத்துவது ஆகும்.

விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

இது “இலங்கையில் இந்தியாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான ஒரு கலாசார நடவடிக்கை” என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

சமீபத்தில் அவர் , “ராமாயணத்தின் புராணக்கதையை வலுப்படுத்தும் புதிய சுற்று கலாச்சார செயல்பாடுகள் நடந்து வருகின்றன” என தெரிவித்தார்.

உள்நோக்கம் இல்லை

எவ்வாறாயினும், “இந்த திட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.” என சீதாஎலிய சீதா அம்மன் ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதன் மூலம் இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.