டெக்சாஸ், டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் நேற்றைய ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்திய ஐக்கிய அமெரிக்கா மேலும் 2 புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது.
ஏற்கனவே கனடாவை வெற்றிகொண்டிருந்த ஐக்கிய அமெரிக்கா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று ஏ குழுவில் முதலிடத்தை வகிக்கிறது.
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்காவும் 159 ஓட்டங்களைப் பெற ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
மொஹமத் ஆமிர் வீசிய சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றது. இதில் 3 வைட்களில் 7 ஓட்டங்கள் கிடைத்தது.
பதிலுக்கு நேத்ரவால்கர் வீசிய சுப்பர் ஓவரில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முன்னாள் ரி20 உலக சம்பியன் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
ஷதாப் கான், அணித் தலைவர் பாபர் அஸாம், ஷஹீன் ஷா அப்றிடி ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களே பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடக்க உதவின.
இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.
சவ்ராப் நேத்ரவால்கர், நோஸ்துஷ் கெஞ்சிகே, அலி கான் ஆகியோர் பவர் ப்ளேயில் மிகத் துல்லியமாக பந்து வீசி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதன் காரணமாக 5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களுக்கு 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிய பாகிஸ்தான் பவர் ப்ளே முடிவில் 3 விக்கெட்களை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதிரடிகளுக்கு பெயர் பெற்ற பாபர் அஸாம், ஷதாப் கான் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து முதல் 26 பந்துகளில் 19 ஓட்டங்களையே பகிர்ந்தனர்.
பத்தாவது ஓவரிலிருந்தே பாகிஸ்தானின் அதிரடி வெளிப்படத் தொடங்கியது. அந்த ஓவரில் 20 ஓட்டங்கள் பெறப்பட்டதால் பாகிஸ்தான் உயிர்பெற்று உற்சாகம் அடைந்தது.
அதன் பின்னர் பாபர் அஸாமும் ஷதாப் கானும் 2ஆவது 22 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்று 4ஆவது விக்கெட் இணைப்பாட்டத்தை 72 ஓட்டங்களாக உயர்த்தினர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷதாப் கான் 40 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது சிக்ஸ் ஒன்றை விளாச முயற்சித்து ஆட்டம் இழந்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸ்களை விளாசினார்.
அவரைத் தொடர்ந்து அஸாம் கான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து சென்றார். (98 – 5 விக்.)
தொடர்ந்து பாபர் அஸாமும் இப்திகார் அஹ்மதும் தங்களிடையேயான இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.
ஆனால், 6ஆவது விக்கெட்டில் 27 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் பாபர் அஸாம் 43 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
இப்திகார் அஹ்மத் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் ஷஹீன் ஷா அப்றிடி 16 பந்துகளில் 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது துடுப்பாட்டமே பாகிஸ்தானுக்கு 150 ஓட்டங்களைக் கடக்க உதவியது.
பந்துவீச்சில் நோஸ்துஷ் கெஞ்சிகே 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சவ்ரப் நேத்ரவால்கர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தியது.
பாகிஸ்தானைப் போன்று சிரமப்படாமல் இலகுவாக ஓட்டங்களைப் பெற்ற ஐக்கிய அமெரிக்கா, பவர் ப்ளேயில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அணித் தலைவர் மொனான்க் பட்டேல், ஸ்டீவன் டெய்லர் (12) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து மொனான்க் பட்டேல், அண்ட்றீன் கவ்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு பலம் சேர்த்தனர்.
அண்ட்றீஸ் கவ்ஸ் 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து மோனான்க் பட்டேல் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 50 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார். (111 – 3 விக்.)
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஜோன்ஸ், நிட்டிஷ் குமார் ஆகிய இருவரும் தடுமாற்றத்திற்கு மத்தில் துடுப்பெடுத்தாடி கடைசி ஒவரில் அதிரடியைப் பிரயோகித்து ஆட்டத்தை சமப்படுத்தினர்.
ஆரோன் ஜோன்ஸ் 36 ஓட்டங்களுடனும் நிட்டிஷ் குமார் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மொஹமத் ஆமிர், நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மொனான்க் பட்டேல்