சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தை காட்டிக் கொடுக்க வேண்டாம்:சரத் வீரசேகர

0
54
Article Top Ad

இலங்கைத்தீவின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூற முடியாது என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடு என்ற அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சராக தான் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு அவதானம் செலுத்த வேண்டும், பொது மக்களை இது தொடர்பில் அறிவுறுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் தற்போது ‘சஹ்ரான் எங்கள் வீரன்‘ என பல விடயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவ்வாறு பகிர்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சில மத்ரஸா படசாலைகள் அரபு மொழியையும், குர்-ஆனையும் மாத்திரம் கற்பித்து வருகின்றன. அவற்றை விரைவில் மூட வேண்டும்.

இலங்கைத்தீவில் நடத்தப்பட்ட உள்நாட்டு போருக்கு உத்தரவு வழங்கியவர்களே இன்று அதிகாரிகளாக உள்ளனர்.

உள்நாட்டு போருக்கு உத்தரவு வழங்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக எந்த நாட்டுக்கும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் பயணம் செய்தால் அவர்களை அந்தந்த நாடுகள் கைது செய்து விசாரணை செய்யும் முறை ஜெனிவா தீர்மானத்தில் உண்டு.

அதேநேரம் சா்வதேச கலப்புமுறை விசரணைப் பொறிமுறையைச் செயற்படுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

ஆகவே எனது மட்டத்திலிருந்து அதாவது நாடாளுமன்ற உறுப்பினராக இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். அவர்களின் தியாகங்களை எவரும் காட்டிக் கொடுக்கக் கூடாது.‘ என கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்ட மக்களுக்காக எதிர்ப்பார்த்த சேவைகளை நிறைவேற்ற முடியுமாக இருந்ததா என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே சரத்வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘ பொது மக்களுக்கான சேவைகள் சரியான முறையில் இடம்பெறவில்லை. அரசாங்கத்திடம் நிதியின்மை காரணமாக எங்களால் சேவைகளை செய்ய முடியாமல் போனது. தற்போது சுமார் மூன்று ஆண்டுகளின் பின்னர் எங்களால் பொது மக்களுக்கு சேவை செய்ய முடிந்துள்ளது.‘ எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், எனது கொள்கைகள் இன்னும் மொட்டுக் கட்சியை சார்ந்து உள்ளது. நான் மௌனமாகவில்லை, நான் மொட்டுக் கட்சியை விட்டு விலகவில்லை. ஜனாதிபதி மாறினாலும் கூட இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆகும். ‘என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிங்கள ஊடகமான ‘நெத் நியூஸ்‘ க்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.