கலைந்தது மோடியின் விம்பம்: கை கொடுக்காத மதவாதம்

0
61
Article Top Ad

இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது.

உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடாக பிம்பத்தை காட்டிக்கொண்டாலும் அங்கு பணநாயகமும் அதிகார துஷ்பிரயோகமே ஜனநாயகத்தை தீர்மானிக்கின்றன.

இந்த ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு தடவையும் மக்கள் தோற்றுக் கொண்டே போகிறார்கள். அதனால்தான் ஜனநாயகம் என்பது கும்பலின் ஆட்சி என்றார் லெனின்.

நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார். அயோக்கியர்கள் கூடி நேரத்தை செலவு செய்யும் இடமே நாடாளுமன்றம் என்றார்.

ஜனநாயகத்தின் போலித் தன்மையையும் பலவீனத்தையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியதே இந்திய தேர்தலும். ஜனநாயக கேலிக்கூத்தாக தான் அது நடந்தேறியது.

வெறுப்பு பேச்சுக்களும் இன அடக்குமுறை வெளிப்பாடுகளும் என மூன்றாம் தர நடத்தைகளுடனேயே தேர்தல் களம் அமைந்திருந்தது.

தேர்தல் ஆணையம் என்பது வெறும் பொம்மையாகவே – ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே – இயங்கியது. ஜனநாயகத்தின் போர்வையிலே மதவாத சர்வாதிகாரத்தையே பா.ஜ.க. நடைமுறைப்படுத்தியது.

மதம் என்பது தனி மனித நம்பிக்கை சார்ந்தது.

உலகம் முழுவதும் மதமற்றவர்கள், நாஸ்திகர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் அதிகரித்து விட்ட இந்த நிலையில், அடிப்படை வாத சனாதன கோட்பாட்டை முதன்மைப்படுத்துவது என்பது பெரும் விருப்புக்கு உள்ளாகாது என்பதை இந்த தொழில் நுட்ப யுகத்திலாவது மத வணிகர்கள் அல்லது கடவுள் வியாபாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று தசாப்தமாக நீடித்த அயோத்தியின் இராமர் கோவில் கட்டும் விவகாரம் முடிவுக்கு வந்து, அவசர அவசரமாக கோயிலைக் கட்டி, கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பே தேர்தலுக்காக இராமர் கோவிலை திறந்து வைத்தார்கள்.

ஆனால் இராமர் கை கொடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி இராமர் கோயில் சூழ உள்ள ஐந்து தொகுதிகளையும் ‘இண்டியா’ கூட்டணி கைப்பற்றியது.

பைசாபாத், பாரபங்கி, அமேதி, அம்பேத் நகர், சுல்தான்பூர் ஆகியன அந்தத் தொகுதிகள். அந்த மக்களின் அடிப்படை இருப்பான நிலத்தை அபகரித்து, வாழ்வியல் உரிமைகளை மறுத்த காரணத்தினால் கோபம் கொண்ட மக்கள் பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.

இவர்கள் மொழியில் இராமரே இவர்களை தோற்கடித்து விட்டார் போலும். மோடி எனும் கட்டமைக்கப்பட்ட பெரு விம்பம் கலைந்து விட்டது.

மோடியே வாரணாசி தொகுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று காலை 10:30 மணி வரை வாக்கு வீதத்தில் பின்தங்கியே இருந்தார்.

2024ஆம் ஆண்டு மூன்று லட்சத்து 71 ஆயிரம் வாக்குக வித்தியாசத்திலும், 2019 ஆம் ஆண்டு நான்கு இலட்சத்தி 79 ஆயிரம் வாக்குக வித்தியாசத்திலும் வென்ற அவரால் 2024ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெற முடிந்துள்ளது.

இவருடைய போலி வாக்குறுதிகள், வெறுப்புப் பேச்சுக்கள், பண மதிப்பிழப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், விவசாயிகளுக்கு எதிரான சட்ட மூலம், சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டத் திருத்தம், ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ எனும் கோசம் மற்றும் வருமான வரித்துறை, அமுலாக்கல்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய புலனாய்வுத்துறை மூலமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டியை) குடிசைக் கைத்தொழில் வரைக் கொண்டு வந்தது, அதானி, அம்பானி, நீர்வ்மோடி போன்றவர்களின் கூட்டு, ராகுல் காந்தியை பதவி நீக்கியமை, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஸ் சிசோடியா, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பல அரசியல் ரீதியான கைதுகள், வறுமை, வேலைவாய்ப்பின்மை, மதவாத வெறுப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு வாதம், கத்தோலிக்க எதிர்ப்பு வாதம் போன்றவற்றுடன் சர்வாதிகார ஆட்சியைத் தொடர்ந்ததால் வந்த பின்னடைவு இது.

இது,மட்டுமின்றி மாநிலக் கட்சிகளை பழிவாங்கியமையும் – குறிப்பாகத் தமிழ்நாட்டில் அ.தி.மு.கவை பலவீனப்படுத்தி மூன்று பிரிவுகளாக்கியதும், சித்தாந்த ரீதியாக பா.ஜ.கவுடன் மிகவும் ஐக்கியமாக இருந்த மகாராஷ்டிரா சிவசேனையை இரண்டாக பிரிந்து ஏக்நாத்சிண்டேயை முதல்வராக்கியதும், அதேபோல் தேசியவாத காங்கிரஸை பிரிந்து அஜித்பவரை துணைமுதல் முதலமைச்சராகியதும், சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதும் மோடி அரசின் அதிகார சர்வாதிகாரத் துஷ்பிரயோகங்கள். இவற்றின் விளைவே தேர்தலில் எதிரொலித்தது.

தேர்தல் பரப்புரையிலும் வகுப்பு வாதத்தையே முன் வைத்தனர். ஏழு கட்டமாக நடந்த தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான மூன்றாம் தர கருத்தியலையே முன் கொண்டு சென்றனர்.

இதுவரை காலமும் இந்தியாவில் பிரதமராக இருந்த எவரும் இவ்வாறான பரப்புரையில் ஈடுபட்டவர்கள் இல்லை. ஒடிசாவிலே தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை இலக்கு வைத்து ஒடிசாவை தமிழர்கள் ஆளலாமோ என வெறுப்பு பேச்சையே பா.ஜ.க. முன்னெடுத்தது.

அதன் விளைவே நவீன்பட்நாயக்கின் 24ஆண்டு கால ஆட்சியை முடிவுறுத்தியது. ஆந்திராவிலும் ஜெகன்மோகன்ரெட்டியின் ஆட்சியும் காணிசீர்திருத்ததால் முடிவுக்கு வந்தது.

400 இடங்களை வெல்வதே இலக்கு என்றனர் பா.ஜ.கவினர். உத்தரப்பிரதேசம் கைநழுவியது போல் மேற்குவங்கத்திலும், கடந்த முறை எடுத்த ஆசனத்தை விட குறைவாகவே கிட்டியது.

தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஓர் ஆசனத்தைக் கூட பெறவில்லை. கேரளாவில் முதல் முறையாக நடிகர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்துத்துவ வாதம் கை கொடுக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் மதவாத சித்தாந்தத்தை முன்னெடுத்த பா.ஜ.கவால் அதை இம்முறை வீயூகமாக வகுத்து வாக்காக மாற்ற முடியவில்லை.

இந்து மதத் தலைவர்கள் இடத்தில் மதவாதம் இருக்கலாம். சாதாரண இந்துக்கள் இடத்தில் பெரும்பாலும் மதவாதம் இருந்ததில்லை.

கத்தோலிக்கர்களை, இஸ்லாமியர்களை ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவர முடியும். அவர்களில் மிக அதிகமானோர் தேவாலயங்களினதும் பள்ளிவாசல்களினதும் தீர்மானங்களைப் பின்பற்றுவார்கள். உலகம் முழுவதும் இந்துக்களை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.

இதற்கு உதாரணம் ஈழத்து சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பல்வேறு விதமான மதவெறுப்புக் கருத்துகளை முன்னெடுப்பதுப் போராடுகிறார்.

அவரது மதவாதக் கருத்தியலையோ அவரது போராட்டத்தையோ ஒரு சிலரை தவிர எவரும் ஆதரிப்பவர்களாக இல்லை.
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தொகுதியிலே மன்னாரைச் சேர்ந்த இந்து மத குரு ஒருவர் களமிறங்கினார்.

அதை சிவசேனையும் ஆதரித்தது ஆனால் வெறும் இரண்டாயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. வன்னி வாக்காளர்களில் 65 வீதத்திற்குக்கு மேல் இந்துக்கள்.

வெற்றி பெற்ற நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கத்தோலிக்கர்களே. இது போன்றதுதான் மோடியின் இந்துத்துவத்திற்கும் விழுந்த பேரிடி. தமிழகத்திலும் பெரியாரின் பகுத்தறிவுக் கோட்பாடு கடந்த 50 ஆண்டுகளாக சனாதனிகளை உட்புக விடுவதில்லை.

மோடி கடந்த 2014,2019 தேர்தல்களை அடுத்து அறுதிப் பெரும்பான்மையுடன், எவரையும் மதிக்காமல் நடத்திய சர்வதிகார ஆட்சியை இம்முறை செய்ய முடியாது.

வாஜ்பாய் 23 கட்சிகளுடன் கூட்டாட்சி நடத்தியமை போல் மோடி – அமித் ஷா இணையர்களால் அரவணைப்போடு ஆட்சி செய்ய முடியாது.

கூட்டு என்பது காகங்கள் போல் கூடி கலைவது அல்ல. மேகங்கள் போல் இணைந்து மழை பொழிவது என்றார் அறிஞர் அண்ணா. ஐந்து ஆண்டுகள் ஆட்சியை தொடர்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

இவர்கள் விரும்பும் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது. சாதாரண பெரும்பான்மைக்கு 34 ஆசனங்கள் தேவை. இதில் ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஏக்நாத் சிண்டேயின் சிவசேனை, லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோத்தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சில சுயேச்சைகள் – இத்தரப்புகளின் ஆதரவில் தான் ஆட்சியைத் தொடர போகிறார்கள்.

இதில் நிதீஷ்குமார், சந்திரபாபுநாயுடு, குமாரசாமி போன்றவர்கள் அரசியலில் பெரும் பலே கில்லாடிகள். தருணம் பார்த்து அணி மாறுவதிலும் வல்லவர்கள்.

மகாராஷ்டிராவில் மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையக்கூடிய வாய்ப்பு உண்டு. சிலவேளை சிவசேனா அணிகளிலும் கூட அவ்வாறான ஒரு மாற்றம் ஏற்படலாம்.

அப்படி நிகழ்ந்தால் மத்தியிலும் பிரச்சினை ஏற்படும். காங்கிரஸும் இவர்களுக்குள் உட்பூசல்களை ஏற்படுத்தும் சீனா அமெரிக்காம்போன்றவையும் தத்தமது முகவர்கள் ஊடாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

ஒரு கட்டத்தில் மீண்டும் நாடாளுமன்றை நேரத்துடன் கலைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அடுத்து வருகின்ற ஜனாதிபதி தேர்தல் கூட பா.ஜ.கவிற்கு சவாலாகவே அமையலாம்.

இதில் அகண்ட பாரதம், பொருளாதார முயற்சி, வல்லரசாகும் எண்ணம், தொழில்நுட்ப எழுச்சி எல்லாம் கனவாகவே போகக்கூடிய நிலை தோன்றலாம்.

ஊடகங்களை வைத்துக்கொண்டு கருத்துருவாக்க பிம்பத்தை கட்டமைத்து வெளிப்படுத்திய தேர்தலுக்கு முந்திய – பிந்திய கருத்துக்கணிப்புக்கள் யாவும் பொய்யாகின.

இந்திய ஊடகங்களில் குறைந்தபட்ச நடுநிலைமை என்கின்ற எடுக்கோளுக்கு இடமில்லை. தமிழக ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் அரசின் உத்தியோக பற்றற்ற பேச்சாளர்கள் போல்தான் ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

அந்த அளவிற்கு ஆதரவுத் தளத்தை மத்திய – மாநில அரசுகள் கட்டமைத்துள்ளன. இதில் வெற்றி பெற்ற 251 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் வழக்கு உள்ளவர்கள்.

பாலியல், கொலை, ஊழல் போன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்க. எப்படி ஜனநாயகம் மிளிரும்?

இதில் ஏழு சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளன. அதில் மூவர் சிறையில் உள்ளனர்.

பஞ்சாபில் வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி அம்ரித் பால் சிங் காதூர் சாகீப், இந்திராகாந்தியைக் கொன்ற பியாந்த் சிங் மகன் கால்சா பரீத்கோர்ட், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்தார் என்று கைதாகி சிறையில் இருக்கும் ரஷீத் பாரமுல்லா போன்றோரும் உளர்.

இவர்கள் இலகுவாக ஜனநாயகக் கடமையாற்ற முடியுமா என்னும் கேள்வியும் உண்டு.

புதிய கூட்டாளிகளின் கோரிக்கையை மோடி எப்படி நிறைவேற்றப் போகிறார்? அக்கினிவீர் திட்டம், சாதி வாரிக் கணக்கெடுப்பு, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, பொது சிவில் சட்டம், ஆந்திராவுக்கு முன்னுரிமை, சபாநாயகர் பதவி உட்பட முக்கிய அமைச்சர் பதவி எனப் பல கோரிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் கூட்டுக் கட்சிகள் உள்ளன.

இதனால் எழும் பிரச்சினைகளை எல்லாம் எப்படி மோடி சமாளிக்க போகிறார்? இதில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தனது தேர்தல் வியூகத்தை சரியாகப் பயன்படுத்தி நித்திஷ்குமாரை வெளியேறாமல் பார்த்திருந்தால் நிலைமை வேறுவிதமான முடிவுக்கு வந்திருக்கலாம்.

மேற்குவங்கத்தில் தனித்து மம்தா29 இடங்களை பெற்றார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி தன்னுடைய தந்திரமான வேட்பாளர் தெரிவால் தலித் வாக்குகளை பெற்று மாயாவதியை ஓர் இடத்தில் கூட வெல்ல முடியாமல் அகற்றி, 38 இடங்களைப் பெற்றது.

கடந்த தேர்தலை விட 48 இடங்களை காங்கிரஸ் வென்று இருந்தாலும் 8 மாநிலங்களில் அது ஓர் ஆசனம் கூடப் பெறவில்லை ஆந்திர பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்திரகாண்ட், திரிபுரா, சீக்கியம், மிசோரம் அவை.

தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சியை 100 இடங்களில் கூடக் காணவில்லை என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்ததும் உண்மையாகியது.

இவை எப்படி இருந்தாலும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக தோல்வியடைந்திருந்த காங்கிரஸ் இம்முறை எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற்றிருக்கிறது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியே.

தமிழ்நாட்டில் மூன்று முனைப் போட்டி நிலவியதால் தி.மு.க. இலாபகரமாக வெற்றி பெற்றது. 2004, 2014லும் கூட இதுவே நிகழ்ந்தது.

அண்ணாமலையின் அரசியல் முதிர்ச்சியற்ற அதிபிரசங்கித்தனமான விமர்சனமே அ.தி.மு.க. கூட்டணி குழம்பக் காரணமாயிற்று.

கூட்டாய் இருந்திருந்தால் குறைந்தபட்சம் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க முடியும். சீமான் வளர்ச்சி கவனிக்கத்தக்கதே.

ஆனாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இன்னும் மிக நீண்ட காலம் முயற்சிக்க வேண்டும். இதில் வாக்கு குறைந்தது தி.மு.கவுக்கு. ஏழு சதவீத வாக்கு கடந்த தேர்தலை விட குறைவடைந்துள்ளது.

இவற்றிற்கு அப்பால் பிராந்திய நலன்களை மூன்றாவது முறை ஆட்சிக்கு வரும் மோடி அரசு எப்படி கையாள போகிறது? அதில் ஈழத் தமிழர் விடயத்தை எப்படி நோக்கப் போகிறது? எல்லை தாண்டிய மீனவர்கள் விவகாரம், கச்சதீவு, அதானி முதலீடு, தீவுப் பகுதிகளில் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களை எவ்வாறு கையாளப்போகிறது? கடந்த காலத்தை போல் – இரு வேறு நிலைப்பாடுகளில் சூழ்ச்சி செய்து தமிழ் மக்களின் விடயங்களை பிரித்து கையாண்டது போல் – இந்த ஆட்சியிலும் அவ்வாறான ஒரு சூழ்ச்சிகரமான தந்திரத்தையே இந்தியா மேற்கொள்ளும்.

இதயசுத்தியாக ஈழத் தமிழர் விடயத்தில் ஒருபோதும் இந்தியா செயல்பட்டதுமில்லை, செயல்பட போவதுமில்லை.

இங்கு இருக்கின்ற இந்திய நலன் விசுவாசிகள் எவ்வளவு தான் வரிந்து கட்டினாலும், தமிழ்த் தேசியம் எனும் போர்வையிலே 13க்கு ஆதரவான கட்சிகள் இந்தியாவின் நிலைப்பாட்டில் மிக தீவிர ஆதரவோடு இருந்தாலும் கூட, இந்தியா எங்கள் விடயத்தில் மாற்றான் தாய் மனப்பான்மையையே தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

ஆகவே அவர்களிடம் இருந்து நமக்கான தீர்வை நீதியான முறையில் எதிர்பார்க்க முடியாது. மோடிக்குக் கூட்டிலும் ஆட்சியிலும் சவாலே உண்டு.

இவற்றையெல்லாம் கடந்து வீறு நடை போடுவாரா மோடி என்பது மில்லியன் டொலர் கேள்வி. இக்கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வி.எஸ்.சிவகரன்