மோடியின் வெற்றி இலங்கைக்கு நன்மையே : தென்னிலங்கையின் இனவாதம்

0
137
Article Top Ad

இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடனான ஆட்சியையே இலங்கையில் ஆளும் அரசாங்கங்கள் எப்போதும் விரும்புகின்றன.

ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி காலம் முதல் தென்னிலங்கையின் தலைமைகள் தனிப்பெரும்பான்மையுடனான இந்திய அரசாங்கத்தையே விரும்புகின்றன.

அதற்கு மிக முக்கிய காரணம் தமிழ் மக்களுக்கு எதிராக குரல் தென்னிந்தியாவிலிருந்து ஒலித்துவிட கூடாதென்பதற்கே. கூட்டணி அரசாங்கங்கள் அமையும் காலத்தில் இலங்கையை ஆளும் தலைவர்கள் இந்திய பிரதமர்களுடன் மிகவும் நெருக்கமாக செயல்படுவதும் நிதர்சனம்.

சர்வதேச அரங்கில் முடக்கியதும் இந்தியாவே

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காங்கிரஸின் ஆட்சி நிலவியது. இப்போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியுடன் என்றுமில்லாதவாறு நெருக்கமாகச் செல்பட்டார்.

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளை இந்தியா வழங்கியதாக தமிழ் மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளையும் சர்வதேச அரங்கில் முன்வைத்திருந்தனர். அதேபோன்று 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் சுயாட்சிக்கான கோரிக்கையை சர்வதேச அரங்கில் முடக்கியதும் இந்தியாவே.

தென்னிந்திய மாநிலங்களின் கருத்து

13ஆவது திருத்தச்சட்டத்தின் பின்னர் ஒற்றையாட்சிக்குள் அதன் அடிப்படையிலான தீர்வையே சர்வதேசமும் வலியுறுத்த ஆரம்பித்தது. என்றாலும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வில் இருந்து ஈழத் தமிழர்கள் இன்னமும் பின்வாங்கவில்லை.

கடந்த இரண்டு முறை பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைத்தது. ஆனால், இம்முறை கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் பலமானதாக இருக்கும் என்பது தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களின் கருத்தாக உள்ளது.

மோடி வாடிக்கையாக கொண்டிருந்தார்

பாஜகவின் கடந்த 8 ஆண்டு ஆட்சியில் வடமாநிலங்கள் மாத்திரமே செழிப்பாக இருந்ததாக தமிழ்நாடு உட்பட பல மாநில முதல்வர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், அவர்களது கோரிக்கைகளையும் பாஜக அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சுமத்தினர்.

குறிப்பாக ஈழத் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் பாஜகவால் கொடுக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளும் கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகத்துக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் இலங்கைவாழ் மற்றும் மலையகத் தமிழர்கள் பற்றியும் பேசுவதை மோடி வாடிக்கையாக கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் ஒலித்த கச்சத்தீவு விவகாரமும் அவ்வாறானதுதான்.

மோடியின் வெற்றி இலங்கைக்குச் சாதகம்

மலையக தமிழர்களுக்காக முன்மொழியப்பட்ட 4ஆயிரம் வீட்டுத் திட்டத்தை மாத்திரமே மோடி நிறைவேற்றியதுடன், 10ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை. மலையகத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் அவர் எவ்வித கருத்துகளை இன்றுவரை முன்வைக்கவில்லை.

13ஆவது திருத்தம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் மோடி பேசியுள்ளார். ஆனால், அதனையாவது நடைமுறைப்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான அழுத்தங்கள் எதனையும் இலங்கை அரசாங்கத்துக்கு அவர் கொடுக்கவில்லை. அதனைதான் இலங்கையும் விரும்புகிறது.

”இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெபாஜகற்றி இலங்கைக்குச் சாதகமாக அமையும்” என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார்.

தமிழகமே தீர்மானிக்கும்

இலங்கையை ஆண்ட மற்றும் ஆளும் தலைவர்களது விருப்பத்தையே கடுமையான இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தும் நபராக தமிழ் மக்களால் பார்க்கப்படும் கம்மன்பில வெளிப்படுத்தியுள்ளார்.

“இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 300 முதல் 350 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்த்தேன். எப்படி இருந்தாலும் பிரதமர் மோடியின் வெற்றி இலங்கைக்கு நன்மை பயக்கும்.

ஏனெனில் இந்தியாவில் நிலையானதொரு ஆட்சி இருக்கும்போது, இலங்கை தொடர்பான கொள்கையை மத்திய அரசே தீர்மானிக்கும்.

சிலவேளை, மத்திய அரசு பலவீனமாகி, ஆட்சியமைக்க தமிழ் நாட்டின் உதவி தேவைப்படும் பட்சத்தில் இலங்கை தொடர்பான கொள்கையைத் தமிழகமே தீர்மானிக்கும்.

அப்போதுதான் இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் தாக்கம் ஏற்படும். எனினும், தமிழகத்தின் ஆதரவின்றி மோடி வெற்றி பெற்றிருப்பது இலங்கைக்கு நல்லதே.” எனவும் கம்மன்பில கூறியுள்ளார்.

இந்தியாவின் பாராமுகம்

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி நாளை 9ஆம் திகதி பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்காக புதுடெல்லி கோலாகலமாக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட தெற்காசியாவின் சில முக்கிய தலைவர்களுக்கு மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் பன்மைத்துவத்தை தமிழ் மக்கள் வரவேற்றாலும், ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் பாராமுகம் தொடர்பில் பெரும் கவலையுற்றுள்ளனர்.

இந்தியாவில் தமிழகத்தின் பங்களிப்புடனான கூட்டாட்சி முறையையே தமிழர்கள் விரும்புகின்றனர். அதன்மூலம் தமிழ் மக்களின் உரிமைகளாவது இந்தியா நாடாளுமன்றத்தில் பேசப்படும். அல்லது ஓரளவு அழுத்தங்கள் மத்தியில் கொடுக்கப்படும்.

ஆனால், அதனை தென்னிலங்கை சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை என்பதே கம்மன்பிலவின் கருத்து வெளிப்படுத்துகிறது. இது கம்மன்பிலவின் கருத்து மாத்திரமல்ல என்பதும் நிதர்சனம்.