பாகிஸ்தானை திணறடித்த இந்தியா: ஆறு ஓட்டங்களால் த்ரில் வெற்றி

0
22
Article Top Ad

T20 உலகக் கிண்ண தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி ஆறு ஓட்டங்களால் த்ரில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

120 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் வீரர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் கையாண்ட விதம் பாராட்டுப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்திருந்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. சிறந்த துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இந்திய அணியை வெறும் 119 ஓட்டங்களுக்கு 19 ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்தனர்.

இந்திய அணி சார்பில் ரிஷப் பந்த் 42 ஓட்டங்களையும், அக்சர் படேல் 20 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.

அணித் தலைவர் ஷர்மா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒன்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 120 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களை இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக கையாண்டு திணறடித்தனர்.

இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் நேர்த்தியான களத்தடுப்பால் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஓட்டங்களை எடுக்க போராடினர். விக்கெட்டை காப்பாற்ற முடிந்ததே தவிர அவர்களால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.

20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஆறு ஓட்டங்களால் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்களை மட்டுமே விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.