மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயமானது: தீவிர தேடுதல்

0
27
Article Top Ad

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் ஒன்பது பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக மலாவி ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மலாவி பாதுகாப்புப் படை விமானம் நேற்று (10) காலை தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட பின்னர் ராடார் அமைப்பிலிருந்து வெளியேறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டப்படி தரையிறங்கியிருக்க வேண்டும்.

எனினும், குறித்த விமானம் ரேடார் அமைப்பில் இருந்து விலகியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும், விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை நடவடிக்கை தொடர வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போயிருந்த நிலையில், மறுநாள் விபத்துக்குள்ளான நிலையில் கட்டுப்பிடிக்கப்பட்டது.

இதன்போது குறித்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மலாவி, தென்கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பிய, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும்.