அரசமைப்பின் பிரகாரம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்தையும் நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வடக்குக்கு 5 நாள் பயணமாக வருகை தந்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (10) இரவு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரையும் மாட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, “தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக 13ஐ நடைமுறைப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளீர்கள். அது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட வகையிலான தீர்வாக அமையுமா?” – என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படும். அதில் மைனஸும் இன்றி, பிளஸும் இன்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.” – என்றார்.