38 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 21 தமிழர்கள், முஸ்லிம்களுக்கு தீபமேற்றி நினைவேந்தல்

0
31
Article Top Ad

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு உலர் உணவை கொண்டுச் சென்ற அரச ஊழியர்கள் உட்பட 21 பேரை இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரிய படுகொலையின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பூநகர் பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக 21 தீபங்கள் ஏற்றப்பட்டு, அவர்களின் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டச் செயலாளரின் உத்தரவிற்கு அமைய, வாழ்விடங்களை இழந்து முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு உலர் உணவுகளை எடுத்துச் சென்ற மூன்று அரச அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் 18 பேர் வெட்டி சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு 38 ஆண்டுகளாக நீதி வழங்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை அமைச்சராக இருந்த போது, ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து கொண்டுசென்ற போது மகிந்தபுர பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இருந்து தப்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21 பேரில் 19 பேர் தமிழர்கள், ஏனைய இருவர் முஸ்லிம்கள்.

தப்பிப்பிழைத்த மூன்று பேர் தாங்கள் பார்த்ததை பொலிஸ் உள்ளிட்ட பொறுப்பான நிறுவனங்களுக்கு முறையிட்டனர், ஆனால் இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

இராணுவத்தின் ஆதரவைப் பெற்ற ரன்பண்டா என்ற ஊர்க்காவல் படைத் தலைவன் தலைமையிலான குழுவினர், யுத்த அகதிகளுக்கு உலர் உணவை எடுத்துச் சென்றவர்களை வழிமறித்து பிரதான வீதியில் இருந்து ஐம்பது மீற்றர் தூரத்திற்கு அழைத்துச் சென்று வெட்டிய பின் சுட்டுக் கொன்றதாக தாக்குதலில் இருந்து உயிர் தப்பியயவர்கள் தெரிவித்திருந்தனர்.

வெருகல் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின் தாக்குதல்களில் உயிர் பிழைத்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டு பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இரு இடங்களில் அகதி முகாம்கள் நிறுவப்பட்டன.

திருகோணமலை மாவட்டச் செயலாளரின் அறிவுரைக்கு அமைய, முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகள் வாரந்தோறும் சேருவிலவிலிருந்து ஈச்சிலம்பற்று வரை மாட்டு வண்டிகள் மூலம் கொண்டுவரப்பட்டது. ஜூன் 12 தாக்குதலின் போது கொலையாளிகள் உலர் உணவையும் கொள்ளையடித்திருந்தனர்.

அண்ணாமலை தங்கராஜா (கிராம சேவகர்) அலிபுகான் (கிராம சேவகர்) அயாசு முகம்மது அப்துல் லத்தீப் (மீள்குடியேற்ற உத்தியோகத்தர்) கோணாமலை வேலாயுதம், கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி, தெய்வேந்திரம் நவரெட்ணம், தம்பிராசா நவரெட்ணம், கனகசபை கனகசுந்தரம், கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி, மூத்ததம்பி காசிப்பிள்ளை, கதிர்காமத்தம்பி நாகராசா, வீரபத்திரன் நடேசபிள்ளை, முத்தையா காளிராசா, முத்துக்குமார் வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை சித்திரவேல் சித்திரவேல் சிவலிங்கம், வீரபத்திரன் சோமசுந்தரம், சித்திரவேல் தம்பாப்பிள்ளை, நல்லையா பரமேஸ்வரன், தாமோதரம் தர்மலிங்கம் மற்றும் புண்ணியம் மதிவதனன் ஆகியோரை படுகொலை செய்யப்பட்டனர்.