உலகளாவிய ரீதியில் 120 மில்லியன் மக்கள் வலிந்து இடம்பெயர்வு

0
43
Article Top Ad

யுத்தம், இயற்கை அனர்த்தம், காலநிலை மாற்றம், நோய் பரவல் இப்படி பல்வேறு காரணங்கள் நிமித்தம் உலகளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில், 117.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் (UNHCR) தெரிவித்துள்ளது.

குறித்த எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டு, முதல் பகுதியில் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையில் 120 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து 12 ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த தொகையானது 2024 ஆம் ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், மோதல் என்பது இடம்பெயர்வுக்கு மிக மிக ஆழமான உந்துதலாக காணப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், சூடானின் உள்நாட்டுப் போர் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கான முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய போர் உலகின் மிகப்பெரிய இடம்பெயர்வு நெருக்கடியாக உள்ளதுடன், 13.8 மில்லியன் மக்கள் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவடையும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஆணையகம் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச புவிசார் அரசியலில் மாற்றம் ஏற்படாத வரை, துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதை நிறுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படும் அகதிகள் மற்றும் ஏனையவர்களின் எண்ணிக்கை 43.4 மில்லியனாக உயர்வடைந்துள்ள போதிலும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெயர்ந்தவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமது சொந்த நாடுகளில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.