ஜனாதிபதித் தேர்தலில் தைவான் தீவிர தலையீடு – அதிருப்தியில் சீனா

0
37
Article Top Ad

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தைவானின் தலையீடுகள் அதிளவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் தேர்தல் முடிவில் செல்வாக்கு செலுத்துவதற்காக தைவான் பிரதிநிதிகள் பல இலங்கை அரசியல்வாதிகளை தீவிரமாக சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிமல் லான்சா மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோர் தைவான் தூதுக்குழுவுடன் இரகசிய சந்திப்புகளை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைப்பதை இலக்காகக் கொண்ட புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது குறித்து இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் ருவான் விஜேவர்தன உட்பட இலங்கையின் தேசிய பாதுகாப்பு எந்திரத்தின் முக்கிய பிரமுகர்களையும் தாய்வான் பிரதிநிதிகள் சந்தித்ததாக கூறப்படுகிறது.

தைவானிடம் இருந்து தேர்தல் பிரச்சார நிதியைப் பெறுவது குறித்து இந்தக் கூட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தைவான் தூதுக்குழுவைச் சந்தித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது கடந்த 75 ஆண்டுகளாக “சீன சார்ப்புக் கொள்கையை” இலங்கை கடைப்பிடித்து வருவதால், இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது.

இந்த முன்னேற்றங்கள் குறித்து சீன அரசாங்கம் தீவிர கவலைகளை வெளியிட்டுள்ளதுடன், இலங்கைத் தேர்தலில் தாய்வான் தலையீட்டின் அளவு மற்றும் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தைவான் இலங்கையில் சீன-விரோத தலைவரை பதவியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. தாய்வானுடனான இலங்கையின் ஈடுபாடு பரந்த பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்குள் நுழைவதைத் தடைசெய்யும் தீர்மானம், இருநாட்டு உறவில் சிறு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. ஜேர்மன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக முன்னுரிமை ஒப்பந்தத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சைகையாக இருந்து. ஆனால், சீன கப்பலின் வருகை தடுக்கப்பட்டமை சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தது.

ஜனாதிபதி ரணிலும் அவரது நிர்வாகமும் சீனாவின் பொறுமையை பலவீனத்தின் அடையாளமாக கண்டுள்ளதை எச்சரிக்கும் வகையிலேயே சீனா தனது ஆராய்ச்சிக் கப்பல்களை மாலைத்தீவுக்கு திருப்பிவிடத் தொடங்கியுள்ளது.

சீனாவுக்கு எதிராக தாய்வான் முகவர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறப்படுவது உண்மையாக இருந்தால் அது இலங்கையில் குறிப்பிடத்தக்க அரசியல் அமைதியின்மையைத் தூண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த வெளிநாட்டு தலையீடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.