இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை வரவுள்ள நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக எஸ்.ஜெய்சங்கரின் இந்த பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக மோடியின் வருகைக்கு முன்கூட்டியே வெளியுறவு அமைச்சரின் வருகை இடம்பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.
மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பு அழைப்பில் கலந்துகொண்டதோடு புதுடெல்லியில் எஸ்.ஜெய்சங்கருடன் விசேட கலந்துரையாடலொன்றையும் நடத்தினார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு மோடி விடுத்த அழைப்பு, அண்டை நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறது என்பதை உணர்த்துவதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அலி சப்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் கொழும்பு வருவார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, நிலத்தொடர்பு, மின் இணைப்பு, வங்கிகளுக்கு இடையேயான கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் பணியாற்றிவரும் பிரதமர் மோடியின் பயணத்திற்கு முன்னதான சில மதிப்பாய்வுகளை செய்ய அவர் இங்கு செய்வார்.” என அலி சப்ரி கூறினார்.
அதானி கிரீன் எனர்ஜியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்திய எதிர்ப்பு உணர்வுகள் அதிகரித்து வரும் பின்புலத்தில் எஸ்.ஜெய்சங்கரின் வருகை அமைந்துள்ளது.