ஐசிசி கிரிக்கெட்டில் வரலாறு படைத்த அமெரிக்கா: சூப்பர் 8 சுற்றுக்கு முதல் முறையாக தகுதி

0
49
Article Top Ad

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து வாஷ் அவுட் முறையில் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.

கடந்த ஜூன் 2 ஆம் திகதி தொடங்கிய ஐசிசி ரி20 உலகக் கிண்ணம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்ற நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்க அணி முதல் முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று (ஜூன் 14) 30ஆவது லீக் போட்டி நடைபெறுவதாக இருந்தது.

இந்த போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாட இருந்தன. ஆனால் அங்கு பெய்த கன மழையால் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் வாஷ் அவுட் முறையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை அமெரிக்க அணி இந்த ஆண்டு தான் பெற்றது.

முதல் முறையிலேயே சுப்பர் 8 சுற்றுக்குள்ளும் அமெரிக்கா தகுதிப் பெற்றுள்ளமையை கிரிக்கெட் ஜாம்பவான்களும் வர்ணனையாளர்களும் வரவேற்றுள்ளதுடன், இது அமெரிக்க கிரிக்கெட்டின் பொற்காலம் என வர்ணித்துள்ளனர்.

உலக வல்லரசாக உள்ள அமெரிக்காவில் பலமான கிரிக்கெட் மற்றும் கால்பந்து அணிகள் இல்லாதிருந்தமையை விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் போன்ற ஒரு ஜாம்பவான் அணியை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் அமெரிக்கா நுழைந்துள்ளமையானது ஐசிசி கிரிக்கெட்டில் அதன் கால்தடத்தை ஆழமாக பதிப்பதற்கு வழிவகுத்துள்ளதுடன், தொடர்ச்சியாக இனி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அமெரிக்க அணிக்கு உணர்த்தியுள்ளது.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 அணிகளுக்குள் உள்ள இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளும் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ள நிலையில் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளதை கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.