2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் நடவடிக்கை உள்ளிட்டு எங்கெல்லாம் தொழில் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் செல்லத்தொடங்கினர்.
ஆனால், தற்போது போர் நடவடிக்கையில் இணைந்துகொண்ட முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட சிலர் இலங்கை திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமது உறவுகளை நாட்டுக்கு அழைத்துவர உதவுமாறு பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் போரில் ஆயுதப்படைகள் மற்றும் கூலிப்படைகளாக பட்டியலிடப்பட்ட சுமார் 2000 இலங்கையர்களை கண்டறியும் வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, பல மாதங்களாக எந்தவொரு தொடர்பும் அற்ற நிலையில் குறைந்தபட்சம் 16 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நிலைகுலைந்துள்ள குடும்பங்கள் அரசியல்வாதிகளிடம் உதவி கோரி வருகின்றன.
தொழில் நிமித்தம் உக்ரைனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் பலர் போர்க் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் சராசரி வருமானத்தை விட 13 மடங்கு அதிகமான மாதாந்த சம்பளம் வழங்கப்படுவதாக வட்ஸ்-அப் குழுக்கள் ஊடாக பகிரப்பட்ட தகவலின் அடிப்படையிலே இவர்கல் உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.
அத்துடன், ரஷ்யாவில் வெளிநாட்டுப் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குடியேறுவதற்கு காணியுரிமை வழங்குவதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த வேலைவாய்ப்பை பெறுவதற்காக சிலர் 10,000 டொலர்களை முகவர்களுக்கு செலுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
அத்துடன், சிலர் நகைகள் உட்பட அனைத்து சொத்துக்களையும் விற்றுள்ளதாகவும் அண்மையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்திருந்தனர்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை ரஷ்ய படையினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மஸ்கோ ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் படைகளையே பணிக்கமர்தியுள்ளதாக நம்பப்படுகிறது.
இவ்வாறு பணிக்கமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ எவ்வளவு வெளிநாட்டவர்கள் தமது இராணுவப் படையில் பணியாற்றுகின்றனர் என்பதனை வெளியிடவில்லை.
இந்த நிலையில், போர்க்கைதிகளை விடுவிப்பதற்கு உக்ரைனை இலங்கை வலியுறுத்தி வருவம் நிலையில், மஸ்கோவிற்கு இலங்கையின் தூதுக்குழுவொன்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.