தமிழருடைய தேசத்தையும் அதன் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வை அடைந்துகொள்ள இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.”
– இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இன்று (20) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை அதன் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. எழுத்து மூலம் சமர்ப்பித்தார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“பிரித்தானிய காலணித்துவ ஆதிக்கத்தில் இருந்து இலங்கை விடுபட்டதன் பின்னரான 75 வருட காலத்தில், இலங்கை அரசானது பொருளாதார ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் பாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 75 வருடங்களாக இலங்கை கடைபிடித்துவரும் கொள்கைகளும், தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையுமே இலங்கையின் இன்றைய இந்த வங்குரோத்து நிலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
எனவே, இந்நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில், இந்த நாட்டின் கொள்கைகளிலும் ஒரு உண்மையான தீர்க்கமான மாற்றம் தேவைப்படுகின்றது.
இலங்கையில் இனப்பிரசினைக்கான அடிப்படை காரணியாக அமைந்தது இலங்கையிலிருக்கும் ‘ஒற்றையாட்சி’ அரசியல் அமைப்பாகும்.
குறிப்பாக 36 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு முற்றுமுழுதாக நடைமுறையில் இருக்கும்போதே தமிழ்த் தேசம் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடைபெற்றிருந்தது.
அதேவேளையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 13 ஆம் திருத்தம் தற்போதும் முழுமையாக நடைமுறையிலுள்ளபோதும்கூட தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை.
குறிப்பாக, 13 ஆம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக, அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் களச்சூழல் மேலும் மேலும் மோசமாகியே உள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தமிழர் தேசம் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பும் தீவிரமடைந்து மீண்டும் இனமுரண்பாடுகள் வலுவடைந்து செல்வதற்கும் அடிப்படைக் காரணம் இதே ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பேயாகும்.
அரச கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாக இருக்கும் வரையில் எந்தவொரு வழிமுறையூடாகவும் அர்த்தமுள்ள சுயாட்சியை அனுபவிக்கவோ அல்லது சுயநிர்ணய உரிமையை உரியமுறையில் பிரயோகிக்கவோ முடியாதவாறு இருப்பதனால், அந்த ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் அறிமுகப்படுப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே தமிழர் தரப்பு முழுமையாக அதனை நிராகரித்து வந்துள்ளது.
இந்த 13 ஆம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, அதன் அதிகாரங்கள் குறித்து இலங்கையின் மீயுயர் நீதிமன்றுகளில் ஏறத்தாழ 30 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதன் தீர்ப்புகள் அனைத்தும், அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரைக்கும், அனைத்து அதிகாரங்களும், கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசிடமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை அளித்திருக்கிறன.
இந்நிலையிலேயே, தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, 13 ஆம் திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தை இந்தியா கோரி வருகின்றது. ஆனால், 13 ஆம் திருத்தத்தின் சரத்துகளின் அமுலாக்கம் குறித்து எப்போதெல்லாம் இலங்கையின் மீயுயர் நீதிமன்றை நாடிய போதெல்லாம், அது மேற்குறிப்பிட்டவாறே தீர்ப்புகளை அளித்திருக்கின்றது.
அரசமைப்பு குறித்தான பொருள்கோடல் செய்து இறுதி முடிவுகளை எடுக்கும் அதியுயர் பீடமாக இலங்கையின் உயர் நீதிமன்றம் இருக்கின்றது. அந்த உயர் நீதிமன்றம் 13 ஆம் திருத்த அதிகாரங்கள் குறித்து இதுவரை காலமும் வழங்கிய தீர்ப்புக்களின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தமானது, இலங்கையின் சட்டவரம்புகளின் பிரகாரம் அது ‘முழுமையாக’ அமுல்படுத்தப்பட்டே உள்ளது.
இலங்கையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்னும் பெயரில் புதிய அரசமைப்புக்கான வரைபை உருவாக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் கடந்த 2016 மார்ச்சில் ஆரம்பமாகி 2019 ஜனவரியில் நிறைவடைந்தது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட அரசமைப்பு வரைபானது தற்போது இருப்பதனை விடவும் மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி கட்டமைப்புக்கான வரைபாகும்.
அரச கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாக இருக்கும் வரையில் அர்த்தமுள்ள சுயாட்சியை அனுபவிக்கவோ அல்லது சுயநிர்ணய உரிமையை உரிய முறையில் பிரயோகிக்கவோ முடியாது. இந்தக் காரணிகளின் அடிப்படையிலே எமது அமைப்பானது, 13 ஆம் திருத்தத்தைத் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகவேனும் கருத்தில் எடுக்கக்கூடாது எனும் நிலைப்பாட்டில் ஆரம்பம் முதல் உறுதியாகவுள்ளது.
அத்தோடு, இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய எந்தவொரு பேச்சும், நேர்மையானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கவேண்டுமெனில், அரசமைப்பு மூலம், நாட்டின் ஐக்கியத்தைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, ஒற்றையாட்சியைக் கடந்து சமஷ்டி முறையைக் கருத்தில் எடுப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைய முடியும் என்பதை சிங்கள தேசத்தின் தலைவர்கள், தமது மக்களுக்கு நேர்மையாகபும் வெளிப்படையாகவும் அறிவிக்க வேண்டும் என்பதையும் எமது அமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.
1985 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இந்தியாவின் ஆசீர்வாதத்தோடும் அனுசரணையோடும் நடந்த பேச்சுக்களில் தமிழர் தரப்பில் அனைவரும் இணைந்து ஒருமித்த குரலில் முன்வைத்த திம்புக்கோட்பாடுகள் தீர்வுக்கான அடிப்படைகளாக இருக்க வேணடுமென எமது அமைப்பு மிக திடமாக நம்புகின்றது.
பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்துள்ள இலங்கை அரசானது, தனக்குரிய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உலக நாடுகளில் தங்கியுள்ள நிலையில், வேறெந்த நாடுகளை விடவும் இந்தியாவுக்கு இலங்கை மீதான பிடி மிகவும் வலிதானது. இக்கட்டான நிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்காக தனது நடவடிக்கைகள் மூலம் சிங்கள மக்களின் மரியாதையும் இந்தியா வென்றிருக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கின்றது.
இந்நிலையில், ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் நிராகரிப்பதை இந்தியா ஏற்று, தமிழரின் அந்த நிலைப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்பதோடு, தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதைப் பாதுகாக்கின்ற வகையிலானதும், தமிழர்கள் ஒருபோதும் இழக்க முடியாத தங்களது சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்கக் கூடியதுமான ஒரு சமஷ்டித் தீர்வுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும் எமது அமைப்பு இந்தியாவைத் தீர்க்கமாக வேண்டிக்கொள்கின்றது.
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் கடந்த 12 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் விவகாரத்தை அங்கிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போரினால் அழிவடைந்த வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அரசினால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தைப் போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகப் பிரகடனம் செய்யவும், இப்பிரதேச அபிவிருத்திக்கென சர்தேச நிதி உதவியைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் ஒருவரை இலங்கையின் பெயர் குறித்து வடக்கு – கிழக்கு நிலைமைகள் தொடர்பான அறிக்கையிடலுக்காக நியமிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையின் கடற்பரப்பினுள் எல்லதாண்டி நுழையும் இந்திய மீனவர்களது இழுவைப் படகுகளால் தமிழ்த் தேசத்து மீனவர்களது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் இந்திய அரசு உடன் நடவடிக்கை எடுத்து தமிழ்த் தேசத்து மீனவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
இறுதியாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இநிதியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதில் தமிழ்த் தேசமும் எமது அரசியல் இயக்கமும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதனையும் இங்கு மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.” – என்றுள்ளது.
………………..