இலங்கையின் நிதிநிலை – பரிஸ் கிளப்புடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்: அமைச்சரவை அங்கீகாரம்

0
29
Article Top Ad

இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் குறுகியகால கடன் மற்றும் நீண்டகாலக் கடன் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்திவரும் பரிஸ் கிளப் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பங்காளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தொடர்ச்சியாக பேச்சு நடத்தியிருந்தது.

குறிப்பாக ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட விடயங்களில் நீண்ட விரிவான உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்பவும் 2022ஆம் ஆண்டில் இருந்ததை விடவும் தற்போது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையிலும் நிதியுதவிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இலங்கையின் நிதி நிலைமைகள் மற்றும் கடன் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதநிதிகளுடனும் நிதி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தியிருந்தனர்.

குறிப்பாக ஐஎம்எப் எனப்படும் சா்வதேச நாணய நிதியம் பேச்சு நடத்தியிருந்து.

ஆனாலும், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் கட்சிகள் குறிப்பாக பிரதான எதிர்க்கட்சிகள் அதனை அரசியலாக்குவதாக நிதி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சிலர் விசனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உடன்படிக்கைகள் நாளை (26) கைச்சாத்திடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாளை (26) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ள நிலையில் இது தொடர்பில் வெளிப்படையான ஒரு கருத்து எதிர்ப்பார்க்கப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.