ஜோ பைடன் -டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் முதல் விவாத நிகழ்வு: விதிமுறைகள் என்னென்ன?

0
43
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் முதல் விவாத நிகழ்வு, இந்திய நேரப்படி நாளை காலை நடைபெறுகிறது. அதிபர் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்த விவாதம் அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

இதில் அமெரிக்க குடியேற்றம், கருக்கலைப்பு விவகாரம் மற்றும் காசா நிலவரம் என முக்கியமான பல்வேறு விஷயங்களை குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 81 வயது பைடன் மற்றும் 78 வயது ட்ரம்ப் என இருவருக்கும் இது முக்கியமான விவாத மேடையாக அமைந்துள்ளது.

சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாத நிகழ்வை சிஎன்என் ஊடக நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. ஜேக் டேப்பர் மற்றும் டானா பாஷ் ஆகியோர் நெறியாளர்களாக இதில் செயல்படுகின்றனர். இந்த விவாதம் பல்வேறு விதிமுறைகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதற்கு பைடன் மற்றும் ட்ரம்ப் தரப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இரு தரப்பு ஆதரவாளர்களின் செயல்கள் எந்த வகையில் விவாதத்தை சீர்குலைய செய்யக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதோடு முன்கூட்டியே எழுதி கொண்டு வரும் குறிப்புகளுக்கு அனுமதி இல்லை. இதில் ட்ரம்ப் வலது பக்கமும், பைடன் இடது பக்கமும் நின்ற படி பேச வேண்டும். இருவரும் தொடக்க உரையாற்ற முடியாது.

வழக்கமாக விவாதங்களின் போது நெறியாளர்கள் ஒவ்வொருவராக பேச அனுமதிப்பார்கள். சில நேரங்களில் ஒருவர் பேசும் போது மற்றவர் குறுக்கிட்டு பேசுவார்கள். சமயங்களில் அப்படி குறுக்கிட்டு பேசுபவர்களின் மைக் மியூட் செய்யப்படும். ஆனால், பைடனும் ட்ரம்பும் பங்கேற்று விவாதிக்கும் இந்த நிகழ்வில் பயன்படுத்தப்படும் மைக்கில் பச்சை நிற விளக்கு ஒளிரும் போது பேசினால் மட்டும் அது நேரலையில் கேட்க முடியும். அந்த விளக்கு ஒளிராத நேரங்களில் பேசினால் அது யாருக்கும் கேட்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.