அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் டொனால்ட் ட்ரம்பின்வெற்றி வாய்ப்பு பிரகாசம்

0
82
Article Top Ad

 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் தொடரப்பட்ட வழங்குகளின் மேன்முறையீட்டை விசாரித்து வந்த அமெரிக்க உயர் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சில விசாரணைகளில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சட்டவிலக்களிப்பு உள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.

இந்தத்தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக இருந்த உடனடிச் சவாலை நீக்கியுள்ளது.

அமெரிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6ற்கு 3 என்ற வாக்கு வித்தியாசத்திலான தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக பதவிவகித்தபோது மேற்கொண்ட உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் ட்ரம்பிற்கு முழுமையான சட்ட விலக்களிப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் உத்தியோகப்பற்றற்ற வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எவ்வித சட்ட விலக்களிப்பும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2020ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயற்சித்ததாக அமெரிக்க மத்திய அரசாங்கத்தினால் தொடரப்பட்ட வழக்கிற்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவைத்தந்துள்ளது. அமெரிக்க உயர் நீதிமன்றத்திலுள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் ட்ரம்பின் குடியரசுக்கட்சி பதவியிலிருந்த காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையிலான விவாத்தின் போது டொனால் டரம்பை எதிர்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விவாத்தில் பெரிதும் சொதப்பி தோல்வியைத்தழுவிய நிலையில் நியுயோர்க் டைம்ஸ்போன்ற பத்திரிகைளே ஆசிரியர் தலைப்பில் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தன. இந்த நிலையில் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜோ பைடனுக்கு இடியாகவும் ட்ரம்பிற்கு வரமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது