அயோத்தியில் பாடம் புகட்டிய மக்கள்: பாஜகவினர் இந்துக்கள் அல்ல – ராகுலின் உரையால் அதிர்ந்த சபை

0
28
Article Top Ad

மோடி குறித்து கிண்டல், சபாநாயகர் மீது விமர்சனம்: மக்களவையில் ராகுல் காந்தியின் கவனம் ஈர்த்த கருத்துகள்

மக்களவைத் தேர்தலின் பின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக பேசிய கருத்துகள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக இந்துக்கள் இல்லை என விமர்சித்தால் ராகுல் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

சிவன், குருநானக், ஜீசஸ் போன்ற கடவுள்கள் மற்றும் அபய் முத்திரை புகைப்படங்களை காண்பித்து பேசினார் ராகுல். தொடர்ந்து சில விடயங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக சாடும் வகையில் பேசினார்.

பிரதமர் மோடி குறித்து கிண்டல்

“சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள். கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்திய உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார்” என்று ராகுல் காந்தி பேசும்போது உறுப்பினர்கள் யாரோ கேள்வி எழுப்ப, “பரமாத்மா மோடியின் ஆத்மாவுடன் நேரடியாக பேசுவார். நாம் மனிதர்கள். நாம் உயிரியல் ரீதியாக பிறந்தவர்கள். நமக்கு பிறப்பு, இறப்பு உண்டு. ஆனால் பிரதமர் மோடி தெய்வீக சக்தியால் வந்தவர்” என்று ஒருவித நக்கல் சிரிப்புடன் பேசினார் ராகுல் காந்தி.

“ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அயோத்தியில் தேர்தலில் போட்டியிட நரேந்திர மோடி இரண்டு முறை சர்வே நடத்தினார். ஆனால், “அயோத்தியில் தேர்தலில் போட்டியிடாதீர்கள், அயோத்தி மக்கள் உங்களைத் தோற்கடிப்பார்கள்” என்று கருத்துக் கணிப்பை நடத்தியவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். அதனால்தான் நரேந்திர மோடி அங்கிருந்து தப்பிச் சென்று வாரணாசியில் போட்டியிட்டார்” என்றார்.

“சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு நானும் கை கொடுத்தேன். பிரதமர் மோடியும் கை கொடுத்தார். நான் கை கொடுத்தபோது நிமிர்ந்து நின்று கை கொடுத்த நீங்கள், பிரதமர் கை கொடுக்கும்போது குனிந்து கை கொடுத்தீர்கள்” என்று சபாநாயகர் அரசியல் சார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும் என விமர்சிக்கும் வகையில் பேசினார்.

இதற்கு பதில் கொடுத்த சபாநாயகர், “பெரியவர்கள் முன் பணிந்து, சமமானவர்களுடன் சரிநிகராக கைகுலுக்க எனது கலாச்சாரம் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை தான் நான் பின்பற்றினேன்” என்று விளக்கம் கொடுத்தார். பதிலடியாக, “உங்கள் வார்த்தைகளை நான் மதிக்கிறேன், ஆனால் இந்த அவையில் சபாநாயகரை விட பெரியவர்கள் யாரும் இல்லை” என்றார்.

அதேபோன்று பாஜகவின் பல்வேறு மதவாதப்போக்குகளை கண்டித்து ராகுல் காந்தி உரையாற்றியதால் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.