தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்

0
43
Article Top Ad

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (04.07.2024) பிறப்பித்துள்ளது.

சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனி உட்பட 21 பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழிலாளர் ஆணையாளர் உள்ளிட்ட 52 பேரை வழக்கின் பிரதிவாதிகளாக கம்பனிகள் குறிப்பிட்டுள்ளன.

தம்மிடம் கலந்துரையாடல்களை நடத்தாது தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாக்குமாறு கோரியே தோட்ட கம்பனிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மீண்டும் இடம்பெற உள்ளது. இதுவரை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவு தொடரும் என்பதுடன், இக்காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது.

தோட்டத் தொழிலாளியின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக கொடுப்பனவுகளுடன் 1700 ரூபாவை வழங்கும் வகையில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொழில் அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது