‘தமிழ்மகள்’ உமா குமரன் யார்?

0
27
Article Top Ad

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். இலங்கை வம்சாவளி தமிழரான இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது.

அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

யார் இவர்? – கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவர். உமா குமரனின் பெற்றோர் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டன் நாட்டில் அவர்கள் குடியேறி உள்ளனர். அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.

அவரது குடும்பம் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வருகிறது. தங்களது குடும்பத்தினர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி உள்ளதாக அவர் சொல்கிறார். உள்நாட்டு போரினால் தங்களின் நிலை மாறியதாகவும். பூமிக் கோளின் பல்வேறு பகுதிகளில் தங்கள் மக்கள் தஞ்சம் கொண்டு இருப்பதாகவும் அவர் சொல்கிறார்.

மேலும், அண்மையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது பாட்டி உயிரிழந்ததாகவும். தேர்தல் காரணமாக இறுதிச் சடங்கில் விர்ச்சுவல் முறையில் பங்கேற்றதாகவும் அவர் சொல்கிறார். இது தான் எங்கள் வாழ்வின் எதார்த்தம். இருந்தாலும் தேர்தலில் தான் போட்டியிடுவது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதாக கருதுகிறார்.

சமூக செயற்பாட்டாளரான அவர் பல்வேறு சமூக அமைப்புளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ‘புரட்சி என்பது என் ரத்தத்தில் கலந்தது’ என்கிறார் எம்.பி உமா. அவரது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவராக செயல்பட்டவர் என சொல்கிறார். ஐ.நா, சுகாதாரம், சுற்றுச்சூழல் சார்ந்து பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் லேபர் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

பாலஸ்தீன விவகாரம், காலநிலை மாற்றம், தமிழ் சமூகத்தின் முன்னேற்றம், தொகுதி மக்களுக்கு மலிவு விலையிலான வீடு, விரைவான மருத்துவ சேவை, உள்கட்டமைப்பு சார்ந்து நிதி செலவினம் போன்ற வாக்குறுதிகளை இந்த தேர்தலில் அவர் மக்களிடம் அளித்திருந்தார். தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.