அதானியின் காற்றாலை திட்டம்: இலங்கை அரசாங்கம் கூறுவதென்ன?

0
31
Article Top Ad

வடக்கில் அதானி பசுமை ஆற்றல் திட்டம் தொடர்பில் சுற்றுச்சூழல் கவலைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், திட்டத்தை சமரசம் செய்ய முடியாது என மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சேதத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே எடுக்க முடியும் என்றும் அமைச்சரின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் பூநகரி மாவட்டங்களில் அதானி காற்றாலை மின் திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ‘வெளிப்படைத்தன்மை இல்லாமை’ ஆகியவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 150 இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியன் பறவைகள் இடம்பெயர்ந்து மன்னாருக்கு வரும், மத்திய ஆசிய விமானப் பாதையின் குறுக்கே வரவிருக்கும் திட்டத்திற்கு இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.

இருப்பினும், இந்த காற்றாலை ஆற்றலுக்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட இடம் என்றும், அதனால் எந்த விடயத்திலும் சமரசம் செய்ய முடியாது என்றும் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இடம்பெயர்ந்த பறவைகளின் பாதைகள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் இனப்பெருக்க முறைகள் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மூலம் இலங்கையில் திட்டங்களை அமைப்பதில் இந்தியாவின் அதானி குழுமம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டங்களில் மன்னார் நகரம் மற்றும் பூநகரிப் பகுதிகளில் மொத்தமாக 484 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அடங்குகின்றன.

2030-50 ஆம் ஆண்டுகளில் இலக்கு நிர்ணயம்

மேலும், 52 காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் மூலம் 70 வீதமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், 2050 ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தியில் கார்பன் நடுநிலைமையை அடையவும் இலங்கை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்குகளை அடைவதற்கு உதவக்கூடிய இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படாத வளம் கடல் காற்று ஆகும்.

உலக வங்கியின் கூற்றுப்படி, வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு, அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள் இலங்கை தனது மின் கட்டமைப்பில் 11,000 மெகாவாட்களை சேர்க்க வேண்டும்.

ஆழம் குறைந்த நீரில் 27 ஜிகா வோட் (GW) நிலையான கடல் காற்று, 50 மீற்றருக்கும் குறைவானது என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழமான நீரில் 29 ஜிகா வோட் (GW) கடல் காற்றில் மிதக்கும் திறன் உள்ளது.

இதேவேளை, அடிப்படை ஆய்வு குறித்த பொது கலந்துரையாடல்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தற்போது தொழில்நுட்ப மதிப்பீட்டிற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.