நேபாளத்தில் நிலச்சரிவு: சுமார் 65 பயணிகளுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்

0
29
Article Top Ad

நேபாளத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால், சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேபாளத்தில், திரிசூலி நதியிலேயே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் கரைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அருகிலிருந்த நெடுஞ்சாலைகளும் உடைந்து விழுந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுக் கொண்டிருந்தபோது நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு பேருந்துகளே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய ஒரு பேருந்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு சென்று கொண்டிருந்ததாகவும் இதில் 24 பயணிகள் இருந்ததாகவும் இதில் 7 இந்தியர்கள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பேருந்து காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்ததாகவும் இதில் சுமார் 41 பயணிகள் இருந்ததாகவும் நேபாளச் செய்திகள் தெரிவித்துள்ளன.

சம்பவம் நடந்த நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால், மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விபத்து நேரிட்ட இடத்தில் மண் சரிவுகளை அகற்றும் பணியும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில், படகுகளில் சென்று பயணிகளை தேடும் பணியிலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளதோடு, 80 பேரளவில் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.