சிக்கலுக்கு உள்ளாகுமா ஜனாதிபதித் தேர்தல்? சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

0
25
Article Top Ad

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இன்னும் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி தனது மனுவில் கோரியுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுக்கு வரும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பொருட்கோடலை வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழில்முயற்சியாளர் ஒருவரால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

“1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் 3-ஆவது சரத்துக்கு அமைய அரசியலமைப்பின் 30 (2)-ஆவது பிரிவு திருத்தப்பட்டாலும், அதனூடாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைவது 5 வருடங்களா அல்லது 6 வருடங்களாக என்பதில் குளறுபடி நிலவுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் கீழ் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் வரை குறைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றாலும், அது நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது கடந்த திங்கட்கிழமை (08.07.24) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டிலும் இந்த விடயத்தின் அடிப்படையில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய நீதியரசர்கள் குழாம், அதே காரணிகளின் அடிப்படையில் இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இதனால் குறித்த மனு மீதான விசாரணையை முன்கொண்டு செல்ல போதுமான காரணிகள் இல்லையெனவும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது.

ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தில் காணப்படும் குழப்பங்களை திருத்தம் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அமைச்சரவைக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

அரசியல் யாப்பில் ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்திருந்தார்.

இதன்பின்னர் ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை கடந்த புதன்கிழமை (10) அனுமதி வழங்கியது.