‘ 22’ அச்சம் வேண்டாம் : அறிவித்தார் ஜனாதிபதி

0
44
Article Top Ad

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாம். அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பணிகள் துறைசார் அனுபவம் மிக்கவர்களிடமே கையளிக்கப்படுமெனவும், அந்த பணிகளை கே.என்.சொக்ஸி போன்ற சட்டத்தரணிகளுடனேயே முன்னெடுத்தாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட வேளையில் சொக்‌ஸி இறைபதம் அடைந்திருந்த காரணத்தினால் அந்த பணிகளை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் கையளிக்க வேண்டியிருந்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த நேரத்தில் அவரின் தவறு காரணமாகவே தற்போது சிக்கலான நிலைமை உருவாகியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனையிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை இன்று (19) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

காலி பிரதேச மக்களின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கில் 1600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய நீதிமன்ற வளாகத்தில், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், இரண்டு மேல் நீதிமன்றங்கள், மூன்று மாவட்ட நீதிமன்றங்கள், இரண்டு நீதவான் நீதிமன்றங்கள் உள்ளன.

சட்ட உதவி மையம், சமூக சீர்திருத்த அலுவலகம், நன்னடத்தை அலுவலகம், கடன் நிவாரண சபை சட்ட உதவி உள்ளடங்களாக நீதித்துறை பணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தக் கட்டிடத் தொகுதியில் உள்ளன.

பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, நீதிமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி, கட்டித்தொகுதியை மேற்பார்வை செய்தார்.

காலி சட்டத்தரணிகளினால் இதன்போது ஜனாதிபதி நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த நீதிமன்ற கட்டிடத்தின் பணிகளை நிறைவு செய்தமைக்காக அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு நன்றி சொல்கிறேன். சுற்றுலா வலயமொன்றை அமைக்கும் நோக்கில் முன்பு நீதிமன்றம் அமைந்திருந்த வளாகத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தேன். இன்று அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

காலியை சுற்றுலா வலயமாக மாற்றும் போது இப்பகுதியில் பாரிய ஹோட்டல்களை கட்டமைக்க வேண்டிய இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். போக்குவரத்துச் சபை, மரக் கூட்டுத்தாபனம், மஹாமோதர வைத்தியசாலை, தாதியர் கல்லூரி, சிறைச்சாலை, தபால் நிலையம் என்பவற்றை நகர மத்தியில் கொண்டுச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹிக்கடுவ பிரதேசத்தில் இதுபோன்றதொரு நீதிமன்றக் கட்டிடத்தை நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலி நீதிமன்ற கட்டிடம் இந்நாட்டு வரலாற்றின் ஒரு பகுதியாகும்.  ஒல்லாந்தர் ஆட்சியின் பின்னர் இலங்கையின் ரோமன், டச்சு சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் காலி நீதிமன்ற பகுதியாகவே காணப்பட்டது.  இங்கு நீதிச் சபை,  சிவில் சபை மற்றும் காணி சபையொன்றும் நிறுவப்பட்டது. இவ்வாறுதான் இலங்கையின் நீதிச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.  அதன்படி காலி நீதிமன்ற பிரதேசம்,  மாத்தறை – காலி என்று இரு பிரிவுகளாக காணப்பட்டன.  ஆனால் இன்றும் காலி மாவட்டம் மட்டுமே அந்த கட்டமைப்புடன் இயங்கிறது.

காணிச் சபையில் ஒல்லாந்தர் அதிகளவில் அங்கம் வகித்தனர். ருஹுனு பிரதேசத்திலிருந்த இலங்கையர்களும் சிறிதளவில் இருந்தனர். அங்கிருந்துதான் இலங்கையர்கள் சட்டத்தைக் கற்றுக்கொண்டனர்.  ஆங்கிலேயர் காலத்தில் இவர்கள் சட்டத்தரணிகளாக முன்வந்தனர்.

அதிலிருந்து பல இலங்கையர்கள் நீதித்துறைக்குள் பணியாற்றினர். அதன் பின்னர் சட்டத்துறையிலிருந்து சட்டவாக்கச் சபைக்கு வந்தனர். அதன்படி சட்டவாக்கச் சபையின் அடிப்படையாகவும் சட்டத்தரணிகளே உள்ளனர்.  பின்னர் டொனமூர் முறையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு கிடைத்தமையினால் அரச மந்திரிகள் சபைகளில் சேவையாற்றினர். பின்னர் சோல்பரி முறைமையின் ஊடாக ஆங்கிலேய முறைமை உருவாக்கப்பட்டது. இந்தியா தனியாதொரு குடியரசு யாப்பைக் கொண்டு வந்தவேளையில் நாம் ஆங்கிலேயர் மரபை பின்பற்றினோம்.

பின்னர் கொல்வின் ஆர்.டி சில்வாவின் கீழ் முதலாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்தன இரண்டாவது குடியரசு யாப்பினை முன்மொழிந்தார். அதன்படி எமக்கு அரசியலமைப்பு குறித்த வரலாறு ஒன்று இருப்பதை போலவே சட்டத்துக்கு மதிப்பளிக்கும் பண்பும் இருந்தது.

1931 ஆம் ஆண்டில் ஆசியா, ஆபிரிக்காவில் முதல் முறையாக இலங்கையே சர்வஜன வாக்கெடுப்பு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது. வேறு எந்த நாட்டுக்கும் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் சில பகுதிகளில் கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை.  அதனைப் பெற்றுக்கொண்டதிலிருந்து தொடர்ச்சியாக ஜனநாயகத்தை பேணிவரும் நாடாகவும் இலங்கை மட்டுமே விளங்குகிறது. அதனையிட்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்

யுத்தம் இருந்தாலும், கலவரங்கள் ஏற்பட்ட போதிலும் 1931 ஆம் ஆண்டு முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை ஆகும். நாம்  எவ்வளவு வாதிட்டாலும் ஜனநாயகத்தை இல்லாமல் ஆவதற்கு இடமளிக்கவில்லை.

தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, இலங்கையில் மாத்திரமே மோதல் இல்லாமல் அதிகாரம் மாற்றப்படுகிறது. இந்த நாட்டில் ஜனநாயகம் செயல்படுகிறது. விவாதங்கள் இருந்தபோதிலும், ஜனநாயகம் ஒருபோதும் இழக்கப்படுவதில்லை.

சில பிரச்சனைகள் வரும்போது ஜனநாயகம் பறிபோய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள். நமது சட்டத்துறை, நீதித்துறை மற்றும் அரசியல் முறைமை  எப்படியோ இந்த கட்டமைப்பை முன்னெடுத்துச் சென்றுள்ளது. இந்த வகையில் 2022ஆம் ஆண்டு ஜனநாயக அமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் உடன்பாட்டுடன் முன்னோக்கிச் செல்கிறோம்.

பாராளுமன்றத்தில் எமக்கு விவாதிக்கலாம். ஆனால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என பிரதம நீதியரசர் தரப்பும், உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளன. அதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

2015 ஆம் ஆண்டில் நாம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பித்தோம். நான் வழக்கமாக இத்தகைய பணிகளை  கே. என். சொக்ஸி சட்டத்தரணிக்கே வழங்குவேன். ஆனால் அப்போது அவர் உயிருடன் இல்லாத காரணத்தால்  சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது.

அவருக்கு  ஒரு வாக்கியத்தை நீக்க முடியவில்லை. அவ்வளவுதான் நடந்திருக்கிறது. அதற்காகத்தான் இந்த அலறல். இது அவரது கவனக்குறைவாக இருக்கலாம். அந்த தவறிற்கு நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். அதுபற்றி மேற்கொண்டு கருத்துக் கூற வேண்டிய அவசியமில்லை. எனவே, இது குறித்து பயப்பட வேண்டாம். நமது நாடு 1931 முதல் ஜனநாயகத்தைப் பாதுகாத்து வருகிறது.

மேலும், இந்தக் காலி வரலாற்றின் பாரம்பரியம் குறித்து ஒரு புத்தகம் தொகுக்கப்படும் என்றால், அதற்கான பணத்தை அரசாங்கம் வழங்கும் எனவும் தெரிவிக்கிறேன்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ,

”ருஹுணுவின் பிரஜை என்ற வகையில் இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றே கூற வேண்டும். இன்று தென் மாகாணத்திற்கு நவீன வசதிகளுடன் நீதிமன்ற வளாகம் கிடைத்துள்ளது.

காலி பிரதேசத்திலுள்ள சட்டத்தரணிகள் தமது பணிகளை முன்னெடுப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த நீதிமன்ற வளாகப் பணிகளை முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆனது. மேலும், இங்கு பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜனாதிபதியின் தலையீட்டினால் இன்று இந்த அழகிய கட்டிடத்தை நிர்மாணிக்க முடிந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் நாடு நெருக்கடியான நிலையில் இருந்த போதிலும், நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தேவையான வசதிகளை ஜனாதிபதி வழங்கினார்.

இந்த புதிய நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவுடன் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எனவே, அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இந்த புதிய நீதிமன்ற வளாகத்தை நாங்கள் நிர்மாணிக்கவில்லை என்பதைக்  குறிப்பிட வேண்டும்.

நீதிமன்றங்கள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே எமது நோக்கம். நீதிமன்றத்தை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் இடமாகவே  கருதுகிறோம்.” என்று தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண,

”இந்த நீதிமன்ற வளாகத்தை யதார்த்தமாக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றி. அன்று நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்த நேரத்தில், இந்தப் பணிகளை தொடர்வது கடினமாக இருந்தது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்து முடிக்கத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கினார். இல்லையெனில், இது பூமியில் நிஜமாகியிருக்காது.” என்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, கீதா குமாரசிங்க, மொஹான் பிரியதர்ஷன சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன,  சம்பத் அத்துகோரள, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஏ. தர்மசிறி, நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எஸ். ஹபுகஸ்வத்த, மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள், காலி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ருவன் ஆசிரி டி சில்வா, உள்ளிட்ட  சட்டத்தரணிகள், அரச அதிகாரிகள்  உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.