22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்ததால் ஜனாதிபதித் தேர்தவுக்கு தடைகள் எதுவும் ஏற்படாதென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களுக்கு மேல் எனக் குறிப்பிடப்பட்டுள்ள சொற் பதத்திற்கு பதிலாக ஐந்து வருடங்களுக்கு மேல் என குறிப்பிடும் வகையில் 22ஆவது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த திருத்தச்சட்டமூலம் மக்கள் மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால் குறித்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் நடைபெறும் வரை ஒத்திவைப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
என்றாலும், அவரது உத்தரவை செல்லுப்படியற்றதாக்கும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை 22ஆவது திருத்தச்சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவித்தலால் ஜனாதிபதித் தேர்தலுக்கு தடங்கல்கள் ஏதும் ஏற்படாதென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலையும் சர்வஜன வாக்கெடுப்பையும் ஒரே தினத்தில் நடத்த முடியாது. இவை இரண்டும் இரண்டு சட்டங்களில் நடைபெற வேண்டியது. அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் அவ்வாறுதான்.” என்றும் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.