லங்கா பிரீமியர் லீக் 2024 இறுதிப் போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் காலி மார்வெல்ஸ் அணியை ஒன்பது விக்கெட்டுகளால் தோற்கடித்தது நான்காவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (21) மாலை ஆரம்பமான இப்போட்டியில் ஜப்னா அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தது.
இதன்படி, ஜப்னா அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பில் பானுக ராஜபக்ச 82 ஓட்டங்களையும், டிம் சீஃபர்ட் 47 ஓட்டங்களையும், சஹான் ஆராச்சிகே 16 ஓட்டங்களையும், அணித்தலைவர் நிரோஷன் டிக்வெல்ல 05 ஓட்டங்களையும், டுவைன் பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜப்னா அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ மூன்று விக்கெட்டுக்களையும், ஜேசன் பெஹரன்டோர்ப் 02 விக்கெட்டுக்களையும், அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய யாழ் ஜப்னா கிங்ஸ் அணி 15 ஓவர்கள் 04 பந்துகள் முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று நான்காவது தடவையாக சாம்பியனாகியது.
முன்னதாக, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஜப்னா அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணியின் Rilee Rossouw ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களைப் பெற்றதுடன், குசல் மெண்டிஸும் அவருக்கு ஆதரவை வழங்கி ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஜப்னா அணிக்காக கடந்த போட்டிகளில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்த பத்தும் நிஸங்க இந்தப் போட்டியில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் சிறந்த ஆட்டநாயகனாவும் Rilee Rossouw தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, இந்தப் போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்களால் பிரேமதாச மைதானம் நிரம்பியிருந்ததுடன், போட்டியைக் காண 27,180 ரசிகர்கள் வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.