பங்களோதேஷ் வன்முறை – இலங்கையை நினைவுபடுத்துகிறது

0
20
Article Top Ad

பங்களாதேஷில் இன்று ஏற்பட்டுள்ள வன்முறைச் சூழல் போன்றதொரு நிலையே 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படவிருந்தது. அதிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டையும் மக்களையும் காப்பாற்றியதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டிலும் வன்முறைச் சூழல் உருவாகியிருந்தது.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் அளவிற்கு நாட்டை வீழ்ச்சியடைய விடாமல் மிகக் குறுகிய காலத்தில் நாட்டை ஒன்றிணைப்பதற்கு ஜனாதிபதி செயற்பட்டார்.

பங்களாதேஷில் தற்போது 2835 இலங்கைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எந்தவொரு இலங்கையர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

குறித்த இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு தலையிடும்.

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள சோகமான சூழ்நிலையால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். சமீபத்தில் ஆட்சியமைத்த அரசாங்கமொன்று அங்கு உள்ளது.

நாட்டில் குழப்பமான சூழ்நிலையை வலுக்கட்டாயமாக உருவாக்கி அதிகாரத்தைப் பெறும் குறுகிய நோக்கத்திற்காக பல உயிர்களை அழிக்கும் இந்த வன்முறைகளை பார்க்கும்போது, ​​​​கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்துகிறது.” என்றார்.

என்றாலும், 1971ல் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் விடுதலை பெற பங்களித்த போர்வீரர்களின் உறவினர்களுக்கு பொதுத்துறை வேலைகளில் மூன்றில் ஒரு பங்கை அந்நாட்டு அரசு 1971 முதல் ஒதுக்கிவருகிறது. இதுவொரு சட்டமாகவும் அந்நாட்டில் உள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளின்றி இருக்கின்றனர். இவர்களின் கோபமே போராட்டமாக அங்கு வெடித்துள்ளது.

இந்த ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெற்ற அந்த அமைதியான போராட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு காவல்துறை கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளைப் பின்பற்றியதே வன்முறைச் சூழலுக்கு முக்கிய காரணம் என உலக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.