எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எவராக இருந்தாலும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவுக்கு எதிராக விடுத்த கொலை அச்சுறுத்தல் காரணமாக அவரின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , எந்தக் கருத்தை தெரிவித்து வந்தாலும் அது தொடர்பில் தாங்கிக் கொள்ள வேண்டிய சக்தி அரசியல்வாதிகளுக்கு உள்ளது எனினும் ஜேவிபியிடம் அது இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு ஊடகவியலாளர்கள் யாரேனும் அச்சுறுத்தப்பட்டால் அவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவை இலக்கு வைத்து ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சிங்கள வாரஇறுதி ஞாயிறு சிலுமின பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
வசந்த சமரசிங்க விடுத்த கொலை மிரட்டல் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வினவ ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்கவை தொடர்புக்கொள்ள “ஒருவன்“ செய்திப் பிரிவு முயற்சி செய்த போதிலும் அது பலனலிக்கவில்லை.