தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த ஒன்பது அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இதன்படி, குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (24) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போதே உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 18ஆம் திக்தி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அதன்படி, இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று (24) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஒன்பது மனுக்களை மூவரடங்கிய அமர்வு பல தடவைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
தேசபந்து தென்னகோன் மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக (SDIG) கடமையாற்றிய காலப்பகுதியில் 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்ற போதும், ‘கோட்டா கோ ஹோம்’ போராட்ட தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட போதும், தென்னகோன் தனது கடமைகளை புறக்கணித்ததாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்