விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: வைகோவின் மனுவை ஏற்றது டெல்லி தீர்ப்பாயம்

0
32
Article Top Ad

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக இந்திய ஒன்றிய அரசு விதித்துள்ள தடையை இரத்து செய்ய வேண்டும் என கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்து மதிமுக தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மே 14ஆம் திகதி அன்று மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

அந்த தடை அறிவிப்பின்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர் நீதிமன்ற நீதியரசர் மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா (Justice Manmeet Pritam Singh Arora) தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்து, கடந்த ஜூன் 5ஆம் திகதி அன்று ஒன்றிய அரசு மீண்டும் அடுத்த அரசாணை வெளியிட்டது.

அத்தீர்ப்பாயம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்கக்கூடாது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஜூலை 23ஆம் திகதி மாலை 4 மணிக்கு இத்தீர்ப்பாயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்திய ஒன்றியத்தில் தடை விதிக்க முகாந்திரம் இல்லை.

ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை இந்திய ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நேற்று (செவ்வாய்க்கிழை) மாலை டெல்லி தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. ஆகஸ்ட் 7ஆம் திகதிக்கு விசாரணை ஓத்தி வைக்கப்பட்டது.

கடந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இதே போன்ற மனுவை வைகோ நீதிமன்ற தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்து இருந்தார்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.