காலஞ்சென்ற விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை

0
19
Article Top Ad

காலஞ்சென்ற சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும், புதிய சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (ஜூலை 27) பொரளை கனத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (25) அதிகாலை, தனது 81ஆவது வயதில் அவர் காலமானதாக உறவினர்கள் அறிவித்தனர்.

இன்று (ஜூலை 26) காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையும், நாளைய தினம் (ஜூலை 27)காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் அன்னாரின் பூதவுடல்  பொது மக்களின் அஞ்சலிக்காக கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஏ. எப். ரேமண்ட் மலர்ச்சாலையில் (A. F. Raymond Parlor) வைக்கப்பட்டுள்ளதாக புதிய சம சமாஜ கட்சி அறிவித்துள்ளது.

1943ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதி பதுளையில் பிறந்த விக்ரமபாகு கருணாரத்ன, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து எப்போதும் ஒரே கொள்கையுடன் செயற்பட்டு வந்ததோடு,  அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து வந்தார்.

சிலோன் பல்கலைக்கழகத்தின் (University of Ceylon) பொறியியல் பட்டதாரியான விக்ரமபாகு கருணாரத்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார்.

சுமார் 18 வருடங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.