நாட்டில் சுதந்திரமான பொலிஸ் துறையை நிறுவுவதும் இன்றியமையாதது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு பேரவை எடுத்த நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காமல் அரசாங்கம் செயற்படுவது பாரதூரமானதென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,
“பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவை எடுத்த நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதனை ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என்பது நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இங்கு அவரது வாதம் என்னவென்றால், அரசியலமைப்பு பேரவை என்பது நாடாளுமன்றத்தின் நீட்சியாக இருப்பதால், அது நாடாளுமன்ற விவகாரமாகவே கருதப்பட வேண்டும். அதன்படி, நாடாளுமன்ற விவகாரங்களில் உயர் நீதிமன்றமோ அல்லது வேறு எந்த நீதிமன்றமோ தலையிடுவதை ஏற்க முடியாது என்பதாகும்.
அதன் பிரகாரம் தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக தொடர்ந்தும் பணியாற்றுவார் என அவர் கூறுகிறார். இங்கே பல முக்கியமான விடயங்கள் உள்ளன.
முதலாவது, அரசியலமைப்பு பேரவை நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தின் நீட்சி அல்ல. அரசியலமைப்பு பேரவை என்பது நாடாளுமன்றத்தில் உள்ள மற்றொரு துறைசார் குழு வகை அமைப்பு அல்ல.
அரசியலமைப்பு பேரவையானது அரசியலமைப்பிலும், வரவு – செலவுத் திட்ட விவகாரங்களிலும் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பொதுப் பயன்பாட்டுத் தலைவர் போன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சுயாதீன அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மற்ற நீதிமன்றங்கள், குறிப்பாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் போன்றவற்றின் நியமன விவகாரங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே, இதனை நாடாளுமன்றத்தின் நீட்சியாகக் கருதுவது தவறு. நாடாளுமன்றத்துக்கு அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டங்களை உருவாக்கும் மற்றும் செயல்படுத்தும் அதிகாரத்தை நாடாளுமன்றம் நீதித்துறைக்கு வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின்படி நாடு நடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிந்து விசாரணைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதே உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு.
அதன்படி, இங்கு உயர்நீதிமன்றம் செய்தது என்னவென்றால், பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் பின்பற்றப்பட வேண்டிய அரசியலமைப்பு நடைமுறை, பேரவையின் விதிமுறைகளை பின்பற்றினார்களா என்பதை ஆராய்ந்தமைதான்.
தேசபந்து தென்னகோன் மனித உரிமை வழக்குகளில் மட்டும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் அல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் அவர் மீது பல்வேறு தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது முழு நாடும் அறிந்த விடயம். இது பொலிஸ் துறைக்கும் தெரியும்.
இப்போது பொலிஸ் திணைக்களத்திற்கு ஒரு பொலிஸ்மா அதிபர் தேவை. அதன் ஊடாகவே அதன் சுதந்திரத்தை மதித்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியும். இல்லையெனில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அல்லது ஜனாதிபதியின் அல்லது அமைச்சரவையின் அல்லது ஆளும் கட்சியின் கைக்கூலியாகப் பயன்படுத்துபவார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது மக்கள் விழிப்புடன் இருப்பார்கள். இவ்வாறான அரசியல் பாதாள உலகம் மீண்டும் அரசை விழுங்க முடியாத வகையில், நாட்டில் சுதந்திரமான சட்டமொன்றை நிறுவுவதும், நாட்டில் சுதந்திரமான பொலிஸாரை நிறுவுவதும் இன்றியமையாதது.” என்றார்.