இனப்பிரச்சினைக்கு உடன்   தீர்வு காணப்பட வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

0
31
Article Top Ad

“இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்துதல் மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை இதன்போது கருத்தில்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள் நீண்டகாலமாகப் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அந்த மாகாணத்தில் பாரிய பொருளாதாரத் திறன் காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தச் சந்தர்ப்பங்களை வடக்கு மாகாணம் உட்பட முழு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றக் கடன் பெற்றதாலேயே நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, அதே தவறை மீண்டும் நடக்க அனுமதிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறையில் முன்னேறிச் செல்வதற்கு பங்களிப்பது நாட்டிலுள்ள அனைத்து கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஏனையவர்களின் பொறுப்பாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன், மற்றவர்களுக்கு இல்லாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“முதலில் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவில் வரி விதிக்க இணக்கம் காணப்பட்ட போதிலும் அதன்பின்னர் வந்த அரசு தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் வரிகளைக் குறைத்தது. இது அரசாங்க வருவாய் குறைவதற்கு வழிவகுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகி, அந்தத் தவறை நாம் மீண்டும் செய்ய முடியாது. ஒரு நாடாக நாம் முன்னேறும்போது, நமது அரசியல் முறைமையையும் மாற்ற வேண்டும்.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்க எவரும் தயாராக இருக்கவில்லை. நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் திறன் கொண்ட ஒருவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அன்றைய ஜனாதிபதி வெளியேறிய பின்னர், நான் பதவி விலகுவதாகச் சொன்னேன். ஆனால், யாரும் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பானது கடன் வாங்குதல் மற்றும் போலி வாக்குறுதிகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது அப்போது புரிந்தது.

நமது அரசியல் முறைமையைக் கருத்தில் கொண்டு வலுவான தீர்மானங்களை எடுக்க வேண்டும். நல்ல எதிர்காலத்துக்காக நாட்டுக்குப் புதிய அரசியல் முறைமையொன்று தேவை. அந்த அரசியல் முறைமையைத் தலைமைத்துவத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது. பொறுப்பை ஏற்கக்கூடிய தைரியமான தலைவர்களே நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர். அத்தோடு இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்துதல் மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை இதன்போது கருத்தில்கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும், அனைவரையும் சமமாக நடத்துவது மிகவும் அவசியம் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இதில் இன மற்றும் மத குழுக்களிடையே சமத்துவம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே சமத்துவம் உள்ளது.

நாட்டில் ஒருபாதியாக இருக்கும் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இதற்கு நாம் தீர்வு காண வேண்டும். சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழகத்தில் ஏற்படப்போகும் பொருளாதார வளர்ச்சியால் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு மற்றவர்களுக்குக்  கிடைக்காத வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் ஒன்றாக அபிவிருத்தி செய்ய வேண்டும். நான் அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இருந்த போதிலும் பின்னர் அது பின்தங்கிப் போனது. இப்போது போர் முடிந்துவிட்டது. எனவே, யாழ்ப்பாணத்தையும் வடக்கு மாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.

வறுமை ஒழிப்பு, விவசாய நவீனமயமாக்கல் போன்ற பிராந்திய அபிவிருத்திக்காக மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும்.

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பனவற்றை வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில் மாகாண சபைத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்து, மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுவதற்கு இடமளிக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் மத்திய அரசும், மாகாண நிர்வாகப் பொறிமுறையும் இணைக்கப்படும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவற்றில் யாழ்ப்பாணம் பெரும் திறனைக் கொண்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்து நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாண மக்கள் நீண்டகாலமாக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். ஆனால், இந்த மாகாணத்தில் நாம் பயன்படுத்த வேண்டிய பாரிய வளங்கள் உள்ளன. பழைய முறையில் முன்னேறிச் செல்ல முடியாது. நல்ல எதிர்காலத்திற்காக தற்போதுள்ள முறைமை மாற்றப்பட வேண்டும். அதற்கு பங்களிப்பை வழங்குவது, மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் என்ற வகையில் நீங்கள் முன்னோடியாவிருந்து பங்களிப்பை வழங்க வேண்டும்.

புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 2022 ஆம் ஆண்டில் நாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் கடுமையானவை. இருந்தாலும், நாம் அதை உறுதியுடன் எதிர்கொண்டோம். நமது நாட்டை முன்னேற்றும் சவாலை வெல்வோம். அனைவரும் ஒன்றுபட்டு புதிய பயணத்தைத் தொடர்வோம் என்று அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி இதன்போது சாதகமான பதில்களை வழங்கியதுடன், நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கான யோசனைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.