பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்

0
33
Article Top Ad

வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

17 வயதுடைய சந்தேக நபரான Axel Rudakubana, 17, பிரித்தானியாவில் பிறந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வன்முறை, தீவைப்பு மற்றும் கொள்ளையில் இறங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

லிவர்பூல், பிரிஸ்டல், ஹல் மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறையை தடுக்க முற்பட்ட பொலிஸார் இதன் போது காயமடைந்துள்ளனர். லிவர்பூலில் குறைந்தது இரண்டு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டுள்ளன.

தென்மேற்கு நகரமான பிரிஸ்டலிலும் இதுபோன்ற சம்வபங்கள் பதிவாகியுள்ளன. பெல்ஃபாஸ்டில், சில வணிக நிலையங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்கிழமை சவுத்போர்ட்டில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

நகரங்கள் முழுவதும் கூடுதல் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு பாரிய கலவரம் ஏற்பட்டிருந்தது.

லண்டனில் ஒரு கறுப்பினத்தவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கியதால், மிகப்பெரிய வன்முறை வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.