மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி தொடர்பிலான கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கிலேயே மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான திருத்தச்சட்டம் அவசர அவசரமாக கொண்டுவரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட விமல் வீரவங்ச எம்.பி,
கால எல்லைகள் எதுவுமின்றி மாகாண சபைத் தேர்தலை நல்லாட்சி அரசாங்கம்தான் பிற்போட்டது. தேர்தல் பிற்போடப்பட்டு பல வருடங்களாகிவிட்டன.
ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற உள்ள இத்தருணத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்தச்சட்டமொன்று அவசரமாக கொண்டுவருவதன் நோக்கம் என்ன?
மாகாண முதலமைச்சருக்கு சார்பான வகையில் ஆளுநர் ஒருவரை நியமித்துக்கொள்ளும் அதிகாரம் வழங்கப்படுவதன் ஊடாக பொலிஸ் கட்டளைகள், காணி கட்டளைகள், சூழல் கட்டளைகள் மற்றும் ஏனைய கட்டளைகளை மாகாண சபைகளுக்கு ஏற்ற வகையில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
இதன் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன எதிர்பார்த்த பாதுகாப்புகள் அனைத்தும் நீங்கிச்செல்லும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்ன இந்த சட்டத்திருத்தத்தை கொண்டுவர முற்படுகின்றனர்.
வடக்கில் வாழும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களையும் பாதிக்கும் ஒரு விடயமாக இது உள்ளது. எனவே, தேர்தல் காலத்தில் தேர்தல் குண்டுகளை போட வேண்டாம் என கோருகிறோம்.
விமல் வீரவங்சவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளுங்கட்சி சார்பில் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, ”இந்தச் சட்டம் உடனடியாக கொண்டுவரப்படவில்லை. நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டு ஆறு மாதங்களின் பின்னரே இது கொண்டுவரப்படுகிறது.
அவ்வாறு கொண்டுவரப்பட்டாலும் சட்டம் திருத்தத்திற்கு உள்ளாக ஆறுமாதங்கள்வரை செல்லும் அதன் போது திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ள முடியும். உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கும் உட்படுத்த முடியும்” என்றார்.