வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 70 பேருக்கு குளவி கொட்டு: சீகிரியாவுக்கு பூட்டு

0
16
Article Top Ad

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 70 பேர் குளவி கொட்டுக்கு இலக்கானதை அடுத்து, சிகிரியாவிற்குள் நுழைவது மத்திய கலாச்சார நிதியத்தினால் (CCF) இன்று பிற்பகல் இடைநிறுத்தப்பட்டது.

குளவிகளின் அபாயம் காரணமாக இன்று நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளதாக சிகிரியா திட்ட முகாமையாளர் துசித ஹேரத் தெரிவித்தார்.

26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்து சீகிரிய பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறாமல் வெளியேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் குளவிகளின் தாக்குதலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என்றும் அவர்களில் பெரும்பாலானோர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகையால் குளவிகளின் கூடுகள் கிளர்ந்தெழுந்ததாக நம்பப்படுகிறது.

இதேவேளை, குளவி தாக்குதலின்றி சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், இல்லாவிடில் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் சுற்றுலா வழிகாட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குளவியை கிளறும்போது அதை விரட்ட நீராவியை தெளிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக திட்ட அலுவலர் தெரிவித்தார். பயணச் சீட்டுகளைப் பெற்று அப்பகுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழந்த சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.