ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் இலங்கைத் தீவு முழுவதும் சூடுபிடித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை குருணாகலையில் நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நடத்த உள்ளார்.
அநுராதபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதுடன், நாட்டு மக்களுக்கு தமது எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகளையும் வெளியிட உள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நேற்றைய பிரசாரக் கூட்டத்தில் 50ஆயிரம் பேர்வரை திரண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது. முதல் கூட்டத்தை சஜித்தைவிட பிரமாண்டமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் ரணில் விக்ரமசிங்கசிங்க தள்ளப்பட்டுள்ளதால் அவரது கூட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பொன்று எழுந்துள்ளது.
இதேவேளை, மற்றுமொரு பிரதான வேட்பாளராக கருதப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெற்கை மையப்படுத்தி காலி, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரக் கூட்டங்களில் இன்று கலந்துகொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்த உள்ளார்.