இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களை விரிவுபடுத்த ‘கூகுள்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொழித் தடைகளை தகர்த்தெறிவது, வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் நிர்வாகத் துறையின் இயக்குனர் அபிஷேக் பாப்னா, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய நிர்வாகவியல் மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக, ‘சாட்பாட்’ எனப்படும் கம்ப்யூட்டருடன் உரையாடக்கூடிய வசதி அடங்கிய, ‘கூகுள் ஜெமினி’ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். இது, ஒன்பது இந்திய மொழிகள் உட்பட, 40 மொழிகளில் செயல்படக் கூடியது.
பல்வேறு துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதன் அடுத்தக்கட்டமாக, மொழித் தடைகளை உடைத்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், மொழித் தடையை உடைப்பது
மிகவும் முக்கியமாகும்.உதாரணத்துக்கு, ஒருவர் தன் உடல்நலப் பிரச்னை குறித்து, தன் தாய்மொழி தெரியாத டாக்டரிடம் எப்படி விளக்குவார்.அதுபோல, தன் மொழி தெரியாதவர்களிடம் ஒருவர் எப்படி வங்கி சேவைகளைப் பெறுவார்.
இங்குதான், மொழித் தடையை உடைத்தெறிய வேண்டும்.
தற்போது ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய இந்திய மொழிகளில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்கி
வருகிறோம். இதை பல மொழிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளோம். மேலும், ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பெங்களூரு, இந்திய அறிவியல் மையத்துடன் இணைந்து, ‘பிராஜக்ட் வாணி’ என்ற விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.அதுபோல, வேளாண் துறையில் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன.
தற்போது தெலுங்கானா அரசுடன் இணைந்து, இது தொடர்பான திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.
அதன் வெற்றியைத் தொடர்ந்து, மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.மண்ணின் ஒவ்வொரு துகள் குறித்த தகவல்களுடன், உற்பத்தியை எப்படி அதிகரிப்பது, சந்தைப்
படுத்துதலை மேம்படுத்துவது என, அனைத்திலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.